தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடத்த தடை விதித்த உயர்நீதிமன்றம் web
தமிழ்நாடு

இடைத்தேர்தல் நடத்த தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி! 'இது தான்' அந்த காரணம்!

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

PT WEB

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி MLA பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், கரூர் தொகுதி MLA எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி MLA சி. விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி MLA ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி MLA இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

CM Vijay

இந்த நிலையில், இவர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடாது எனக் கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இடைத்தேர்தல் நடத்தி எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுத்த பின், தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்து விட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற்படும் என்று வாதிட்டார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் 1967 முதல் 2018 வரை பல தீர்ப்புகளை வழங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இடைத்தேர்தல்

இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் இன்னும் கிடைக்காததால் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியாது என கூறப்பட்டது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததாக தெரிவித்தார். முதல்வர் விஜய் தரப்பில், மனுதாரர் அந்தத் தொகுதிகளின் வாக்காளர் அல்ல என்றும், இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான முடிவு தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குட்பட்டது என்றும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய் மற்றும் தொடர்புடைய எம்.எல்.ஏ.க்கள் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை, இந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.