2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. ஆனால், திமுக தரப்பில் இருந்து கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என அறிவித்திருந்தாலும், காங்கிரஸ் நிர்வாகிகள் அக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, அக்கட்சியின் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் பொதுவெளிகளில் கூட்டணி ஆட்சி என்றக் கோரிக்கையை தொடர்ந்து கூறிவருகிறார்.
ஞாயிற்றுக் கிழமையான இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், ”பல திமுக அமைச்சர்கள் காங்கிரஸை சாதாரணமாக பேசுகின்றனர். காங்கிரசுக்கு தன்மானம் தான் முக்கியம். மரியாதை கிடைக்காவிட்டால் திருப்பி அடிப்போம். காங்கிரஸ் கேட்பதெல்லாம் மரியாதையைத் தான். திமுக அமைச்சர்கள் பேசுவது வலியைத் தருகிறது. காங்கிரஸின் கீழ்நிலைத் தொண்டர்களுக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என்பது தான் ராகுல் காந்தியின் விருப்பம்” என்றார்.
அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மேலிட நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், மகளிர் உரிமைத் தொகை சிறந்த நலத்திட்டம் என பாராட்டியுள்ளார். ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என நம்புவது மூடநம்பிக்கை என்றும், 3 ஆண்டுகளில் தேர்தலுக்கு முன்னதாக இதுபோன்ற திட்டங்களை 9 பெரிய மாநிலங்கள் அறிவித்தன. ஆனால், அதில் 4 மட்டுமே வெற்றி பெற்றன, 5 தோல்வியடைந்தன என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இத்துடன் இனிமேல் யாரும் கூட்டணி ஆட்சி குறித்து பேசமாட்டாகள் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 5ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை குறிப்பிட்டு திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசிய வீடியோவையும் இணைத்துள்ளார்.
இதனால், காங்கிரஸ் நிர்வாகிகள் என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், அடுத்தடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுவெளியில் தாக்குதல் நடத்துவதால், மேலிடத்தின் திட்டம்தான் என்ன? என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக்குள்ளிருந்தபடியே குடைச்சல் தரும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஏன் தொடர்ந்து திமுகவை விமர்சிக்கிறார்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.