தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கும் ஒத்துழைப்பு பெல் நிறுவனத்திற்கு ஏன் இல்லை? - நீதிமன்றம்

webteam

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கும் மத்திய அரசு திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க முன்வராதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மேரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “செங்கல்பட்டில் உள்ள பயோடெக் நிறுவனத்தில் கோரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தடுப்பூசி எளிதாக சென்றடையும்.

அதே போல திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். ஆகவே இந்த நிறுவனங்களில் அதற்கான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

அவை பின்வருமாறு:-

பெல் நிறுவனத்தில் 3 கலன்களில் 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமா?

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆக்சிஜன் தயாரிப்பு குறித்து பெல் நிறுவனத்திற்கு எழுதிய கடிதம் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

கோவாக்சின் மருந்தை ஐசிஎம்ஆர் உதவியுடன் தனியார் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த நிலையில் மத்திய அரசே தடுப்பூசிகள் தயாரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கும் மத்திய அரசு, திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க முன்வராதது ஏன்?

மத்திய அரசிற்கு சொந்தமாக எத்தனை தடுப்பூசி நிறுவனங்கள் உள்ளன? அதன் தற்போதைய நிலை என்ன? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர்.

இது குறித்து வரும் 19 ஆம் தேதி விரிவான பதில்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.