சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை எதிர்த்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து கடிதம் அனுப்பியுள்ளது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை அனுப்பி வைக்கும் படியும், அதன் அடிப்படையில் இந்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் உயர்நீதிமன்ற தடை காரணமாகவே மத்திய அரசு மேல் நடவடிக்கையை தொடர முடியவில்லை என மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Read Also -> நாயை கொன்றதாக புகார் கொடுத்த மனைவி - கணவர் கைது
இதையடுத்து சிலை கடத்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், சிபிஐயில் ஆள் பற்றாக்குறை இருப்பதாலும் சிலை கடத்தல் வழக்குகள் விசாரணைக்கு ஒத்துழைப்பு மட்டுமே அளிக்க முடியும் என சிபிஐ தெரிவித்துள்ளது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் முன் உரிய நடை முறைகளை பின்பற்றாமல் முதலில் அரசாணை பிறப்பித்தது ஏன் எனவும் கேள்வி ஏழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சிபிஐ அனுப்பிய கடிதம் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இது குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று வழக்கு விசாராணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.