உலகளவில் சிறந்த பல்கலைக்கழகங்களை, QS என்ற சர்வதேச அமைப்பு ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவின் 54 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகம், 383ஆவது இடத்திலிருந்து 82 இடங்கள் பின்தங்கி 465ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ், முதல் 200 பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பிடித்திருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்தச் சரிவுக்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணங்களில் ஒன்று, துணை வேந்தர் நியமனத்தில் நிலவும் சிக்கல் என கூறப்படுகிறது. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இந்தப் பிரச்சினை நீண்டகாலமாகவே நீடித்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முந்தைய துணை வேந்தர் வேல்ராஜின் பதவிக்காலம் 2024 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது. அன்றிலிருந்து இதுவரை புதிய துணை வேந்தர் நியமிக்கப்படாததால், பல்கலைக்கழகத்தின் அன்றாடச் செயல்பாடுகள், மாணவர்களுக்குப் பட்டச் சான்றிதழ்கள் வழங்குவது போன்ற பல முக்கியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மிக முக்கியமாக, மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம், உறுப்பு கல்லூரிகளில் பேராசிரியர்கள் முறைகேடாக பணியாற்றிய விவகாரம் என, அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயர் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. துணை வேந்தர் இல்லாத நிலை, ஒட்டுமொத்த நிர்வாகத் திறனையும், கல்வித் தரத்தையும் பாதித்து, தேசிய மற்றும் சர்வதேச தரவரிசைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் உலக தரவரிசையில் பின் தங்கியது குறித்து பேசியிருக்கும் கல்வியாளர்கள், நிதிப் பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகள், ஆராய்ச்சிக்குப் போதிய முக்கியத்துவமின்மை போன்றவையும் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
அதேபோல ஐஐடி மெட்ராஸ் தனது சர்வதேச ஆராய்ச்சி நெட்வொர்க்கில் கவனம் செலுத்தி முன்னேறியது போல, அண்ணா பல்கலைக்கழகம் அந்த அளவுகோள்களில் போதிய முன்னேற்றம் அடையாமல் இருந்திருக்கலாம் எனவும், அண்ணா பல்கலைக்கழகம் தனது கல்வித் தரத்தையும், சர்வதேச அங்கீகாரத்தையும் நிலைநாட்ட வேண்டியது அவசியம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில், துணை வேந்தர் நியமனப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதும், நிதி மற்றும் ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்துவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்பது கல்வியாளர்களின் அறிவுரை.