தமிழ்நாடு

கல்வெட்டுகளை படிமம் எடுக்கும் வசதியை சென்னையில் ஏன் ஏற்படுத்தக்கூடாது? - நீதிமன்றம்

கல்வெட்டுகளை படிமம் எடுக்கும் வசதியை சென்னையில் ஏன் ஏற்படுத்தக்கூடாது? - நீதிமன்றம்

JustinDurai

மைசூருவில் இருப்பதை போல் பழங்கால கல்வெட்டுகளை படிமம் எடுக்கும் வசதியை சென்னையில் ஏன் ஏற்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் அகழாய்வை தொடரவும், முடிவுகளை வெளியிடவும் வலியுறுத்தி வழக்கறிஞர் திருமுருகன், உள்ளிட்ட பலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட 7 இடங்களில் தொல்லியல் ஆய்வை தொடர மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளாதாகவும், கீழடி 5 மற்றும் 6ம் கட்ட ஆய்வுகள் குறித்து விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் அறிக்கை ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர். தொல்லியல் கல்வெட்டுகளை படிமம் எடுக்கும் வசதி மைசூருவில் மட்டுமே உள்ளதை சுட்டிக்காட்டி ஏன் அதன் கிளையை சென்னையில் வைக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் அகழாய்வுகளை மத்திய தொல்லியல் துறை ஏன் முழுமையாக மேற்கொள்ளக்கூடாது என்றும் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.