நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுமைக்குமான தடுப்பூசிக்கு இரண்டே இரண்டு நிறுவனங்களை மட்டுமே இந்தியா நம்பியிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே 3 பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தும் தடுப்பூசி தயாரிக்க முடியாமல் இருக்கும் சூழல் உள்ளது.
கொரோனாவில் இருந்து உயிர் காக்கும் வகையிலான தடுப்பூசிகளை இந்தியாவில் இரண்டு தனியார் நிறுவனங்கள் தயாரித்து அளித்து வருகின்றன. ஆனால், 2014-ஆம் ஆண்டு வரையிலும் தமிழகத்தில் மட்டுமே தடுப்பூசிகளை தயாரிக்கும் மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தன. பெரும் தேவை உள்ள சூழல்களில் இந்த நிறுவனங்கள் தடுப்பூசிகளை விரைந்து தயாரித்தளித்தன.
சென்னை கிண்டியில் உள்ள BCG ஆய்வகத்தில் அண்மையில்தான் மீண்டும் BCG தடுப்பூசி தயாரிப்பு தொடங்கப்பட்டது. குன்னூரில் இயங்கிவரும் பாஸ்டர் நிறுவனமோ இன்னும் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை தொடங்க முடியாதநிலையில் உள்ளது. 2018 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட தடுப்பூசி தயாரிப்புப் பூங்கா, மத்திய அரசின் நிதிக்காக இன்றுவரை காத்திருக்கிறது. மத்திய அரசின் சர்வதேச நோயெதிர்ப்பு திட்டத்தின் கீழ் குறைவான விலையில் தடுப்பூசிகளை தயாரிக்கும் வகையில் இந்த தடுப்பூசி தயாரிப்புப் பூங்கா திட்டமிடப்பட்டது.
இந்த மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் நாட்டில் நான்கில் மூன்று பங்கு தடுப்பூசி தேவையை நிறைவேற்றக்கூடியவை. மேலும், தடுப்பூசிகளின் விலையும் 50 சதவிகிதம் குறைக்கக்கூடியவை என்று மூத்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
செங்கல்பட்டு தடுப்பூசி பூங்கா செயல்படத்துவங்கிவிட்டால், 500 மில்லியன் டோஸ் வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் உட்பட அனைத்து தடுப்பூசிகளையும் மத்தியஅரசு தயாரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கூறும்போது, “ சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிப்புக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் மேம்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது.
தனியார்மயம் என்ற பெயரில் கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்துக்கும் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு மக்களை அரசு தள்ளியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும், கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும் என்று கூறிய நிலையில், இந்தியாவில் மட்டும்தான் பிரதமரே தடுப்பூசியின் விலையை அறிவிக்கிறார் ” என்றார்.
பாஸ்டர் நிறுவனம் குன்னூரில் 30 ஏக்கரில் புதிய வைரல் தடுப்பூசி யூனிட் அமைப்பதற்காக மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.இங்கு அனைத்துவிதமான தடுப்பூசிகள் மற்றும் ரேபீஸ் தடுப்பு மற்றும் பாம்புக் கடிக்கான மருந்துகள் தயாரிக்கப்பட உள்ளன.
கிண்டியில் உள்ள BCG தடுப்பூசி ஆய்வகம், 1948 ஆம் ஆண்டு மே 1 -ஆம் தேதி தொடங்கப்பட்டது. இங்கு புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சைக்கான உறைநிலை உலர் பிசிஜி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்ட இந்த ஆய்வகம் அண்மையில் தான் மீண்டும் இயங்கத் தொடங்கியது