தமிழ்நாடு

பணம் கொடுத்து பணிக்கு வருபவர்கள் நேர்மையாக பணியாற்றுவார்கள்?

பணம் கொடுத்து பணிக்கு வருபவர்கள் நேர்மையாக பணியாற்றுவார்கள்?

webteam

பணம் கொடுத்து பணிக்கு வருபவர்கள் நேர்மையாக பணியாற்றுவார்கள்? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

ஜனவரி 27ல் நாளிதழ் ஒன்றில், TNPSC, TRB, TET, SLET, NET உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் செய்யப்படும் முறைகேடுகள் குறித்த பத்திரிகளைகளில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் பணம் கொடுத்து தேர்வில் தேர்ச்சிப் பெற முயல்பவர்கள் தாங்கள் எழுதிய  தேர்வு கோடிங் சீட்டை குறிப்பிட்ட தரகர்களிடம் கொடுத்து அதன் மூலம் திருத்தி எழுதி  2 நாட்களில் அவற்றை மாற்றி வைத்துவிடுவதாக அப்பத்திரிகை விளக்கி இருந்தது. 

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய  புகாரின் அடிப்படையில், இது போல தவறான வழியில் தேர்வானவர்கள் ஆனால் 270 முதல் 280 பேர் வரை இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. தவறு செய்தவர்கள் தவறான முறையில் மதிப்பெண்களை பெற்றதோடு, தகுதியுடைய நபர்களின் இடங்களையும் பறித்துள்ளனர். 

சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த நிகழ்வை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. போட்டித்தேர்வுகளை முறைப்படுத்தவும், முறைகேடுகள் நடப்பதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போட்டித்தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மீதான விசாரணையை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அல்லது அவை தொடர்பான விசாரணைகள், சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர் தரப்பான மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு, பணம் கொடுத்து பணிக்கு வருபவர்கள் எவ்வாறு நேர்மையாக பணியாற்றுவார்கள்? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இது கவனிக்கப்பட வேண்டிய விசயம் என குறிப்பிட்ட நீதிபதிகள், அவுட்சோர்சிங் முறை பின் நடைபெற்ற எல்லா தேர்வுகளிலும் இந்த முறைகேடுகள் நடைபெற்றிருக்குமோ என சந்தேகம் எழுப்பினர்.  தொடர்ந்து இது போன்ற தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? அந்த வழக்கு விசாரணைகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து தமிழக தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.