சட்டமன்ற தொகுதியாக உருவெடுத்த பின் முதல்முறையாக இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது மதுராந்தகம் தொகுதி. அதிமுக, திமுகவின் கோட்டையாக இருந்துவந்த மதுராந்தகத்தில், கால் பதிக்குமா தவெக?... தன் செல்வாக்கை தக்கவைக்குமா அதிமுக?... எத்தனை முறை திராவிடக் கட்சிகள் அத்தொகுதியை தங்கள் வெற்றிக் கொடியை நாட்டின என்ற விவரத்தை விரிவாக பார்க்கலாம்...
தமிழ்நாட்டிற்கு சென்னை மாகாணம் என பெயர் இருந்த காலகட்டமான 1951 ஆம் ஆண்டில் சட்டமன்ற தொகுதியாக உருவெடுத்தது மதுராந்தகம். அப்போது 1952-ல் நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. தொடர்ந்து அடுத்த இருமுறைகளும் அதாவது 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் காங்கிரஸே வென்றது. பின் அடுத்த மூன்று முறை நடந்த தேர்தல்களில் தொகுதி திமுக வசம் சென்றது. 1967, 71, 77 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக திமுகவே வெற்றிக் கொடி நாட்டியது. 1980-ல் முதல்முறையாக மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வெற்றிக் கனியை பறித்தது. பின் 1984-ல் திமுக வென்றது. முதல் வெற்றிக்குப் பின் அடுத்த தேர்தலில் வாய்ப்பை தவறவிட்ட அதிமுக, 1989 தேர்தலில் தொடங்கி 1991-லும் வெற்றியை தன்வசப்படுத்தியது. பின் மீண்டும் 1996-ல் திமுகவும், 2001-ல் அதிமுகவும் மாறி மாறி வென்றன.
1962 ஆம் ஆண்டு மதுராந்தகம் தொகுதியில் வாய்ப்பை இழந்த காங்கிரஸ் கட்சியானது 2006 ஆம் ஆண்டு மீண்டும் அங்கு வென்றது. ஆனால் அடுத்த முறை 2011-ல் தேர்தல் நடந்தபோது காங்கிரஸால் வெல்ல முடியவில்லை. 2011 தேர்தலில் அதிமுகவும், 2016-ல் திமுகவும் மதுராந்தகத்தை மாற்றி மாற்றி ஆண்டன. அதன் பின் கடந்த இருமுறை நடந்த தேர்தல்கள், அதாவது 2021 மற்றும் 2026 ஆகிய தேர்தல்களிலும், மதுராந்தகம் தொகுதியில் அதிமுகவே வென்றது.
2021 தேர்தலின்போது 86,646 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற மரகதம் குமரவேல், 2026-ல் 69,284 வாக்குகளைப் பெற்று வெற்றிக் கனியைப் பறித்தார். 2021-ல் 83,076 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த திமுக, கடந்த முறை நடந்த தேர்தலில் வெறும் 59,838 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். 2021-ல் 9,293 வாக்குகளைப் பெற்று நாதக மூன்றாம் இடம் பிடித்திருந்த நாதக, நடந்துமுடிந்த தேர்தலில் வெறும் 4,950 வாக்குகளை மட்டுமே பெற்றது. 2026 தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட தவெகவின் எழில் கேத்தரின் எழில்மலை மதுராந்தகம் தொகுதியில் 62,090 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார்.
இப்படி 4 முறை காங்கிரஸும், 6 முறை திமுகவும், 7 முறை அதிமுக வென்ற மதுராந்தகம் தொகுதியில், வரக்கூடிய இடைத்தேர்தலில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆட்சியை பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் திமுக, 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தவெக என இந்த தேர்தல், மும்முனை போட்டியாக கொஞ்சம் டஃப் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. தற்போது மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை 1 லட்சத்து 7,288 பெண் வாக்காளர்களும், 1 லட்சத்து 3,943 ஆண் வாக்காளர்களும், 64 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 295 பேர் உள்ளனர்
தேர்தலுக்குப் பின் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியம் ஆன மரகதம் குமரவேல் கடந்த இரு தேர்தல்களிலும் மதுராந்தகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கும் நிலையில், அவருக்கு தவெக தரப்பில் வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், திமுக, அதிமுக ஆகியவை முன்னிறுத்தும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.