தமிழ்நாடு

கொரோனா விதிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிப்பது யார்? - பொதுசுகாதாரத்துறை விளக்கம்

கொரோனா விதிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிப்பது யார்? - பொதுசுகாதாரத்துறை விளக்கம்

jagadeesh

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில், கட்டுப்பாடுகளை மீறுவோரிடம் 3 துறையினர் அபராதம் வசூலிக்கலாம் என்று பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வநாயகம் விளக்கமளித்துள்ளார்.

முகக்கவசம் அணியாவிடில் 200 ரூபாயும், பொது இடங்களில் உமிழ்நீர் உமிழ்வோருக்கு 500 ரூபாயும், பொது இடங்களில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றாத சிகை அலங்கார நிலையம், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழலில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோரிடம் யார் அபராதம் வசூலிப்பர் என எழுந்த கேள்விக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வநாயகம் புதிய தலைமுறைக்கு பதிலளித்திருக்கிறார். அதன்படி, காவல்துறை, பொதுசுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்கள் அபராதம் வசூலிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் மீறப்படும் பகுதிகளில் இந்த மூன்று தரப்பினரில் யார் இருக்கிறார்களோ அவர்கள் அபராதம் வசூலிப்பர் என்றும் செல்வநாயகம் பதிலளித்துள்ளார்.