பிரேமலதா புதிய தலைமுறை
தமிழ்நாடு

”முகத்தை மூடிக்கொண்டு சென்றது யார்?” - சட்டப் பேரவையில் முதல்வரிடம் கொந்தளித்த பிரேமலதா!

தவெக ஆட்சிக்கு, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐ.யூ.எம்.எல்., மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

Prakash J

இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பேசிய தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த், எதிரி என்றும் பாராமல் முதல்வர் விஜய் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்தையும் அவரது திட்டங்களையும் பாராட்டிப் பேசிய பிறகு, முகம் மூடிச் சென்று தங்களைச் சந்தித்தது யார் என கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பெரும்பான்மைக்கான இடங்களைப் பெறுவதற்காக தவெக, பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. அந்த வகையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐ.யூ.எம்.எல். உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கின. இதைத் தொடர்ந்து 120 எம்எல்ஏக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியதால் அழைப்பு விடுத்த தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர், சட்டசபையில் மே 13ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் ஆரம்பமானதும், முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். அதன் பின்னர் நம்பிக்கை தீர்மானம் சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து முதலில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐ.யூ.எம்.எல்., மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பின்போது பேசிய தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த், எதிரி என்றும் பாராமல் முதல்வர் விஜய் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்தையும் அவரது திட்டங்களையும் பாராட்டிப் பேசிய பிறகு, “உங்களுடைய ஆட்சி வெளிப்படையானதாக இருக்கும். மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நீங்கள் அன்று சொன்னீர்கள். அதுபோல், தாம் அரசு குடும்பத்தில் இருந்து வந்தவன் அல்ல; ஓர் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் என்பதை நீங்கள் முதலமைச்சராகப் பதவியேற்றபோது கூறியதை அனைவரும் வரவேற்றோம். நாம் சொல்லும் செயலும் சொல்லும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அவையிலே, இன்றைக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தருணத்தில், முதல்முறையாக மனவேதனையோடு நான் பதியவைக்கிறேன்.

இங்கு குதிரைப்பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் அத்தனை பேருமே அதை வந்து சொல்லும்போது, இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில், நடக்காத ஒரு விஷயம் அதுவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அவையிலே இந்த முக்கியமான நாளிலே பேச வேண்டிய நிலையிலே ஏற்பட்டதற்காக உண்மையில் நான் மனவேதனை அடைகிறேன். அதேபோல், இங்கு முகம் மூடி யாரும் செல்ல வேண்டிய அவசியமில்லை. அனைவருக்கும் ஒரு வெளிப்படையான ஆட்சிதான் செய்வோம் என அன்று முதல்வர் சொன்னார். அப்படியிருக்கையில், முதல்வர் அவர்களைச் சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு அன்று வாகனத்தில் சென்றார்கள் என்று நிச்சயமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், அதற்குக் காரணம் குதிரைப் பேரம் என்றால், இதைவிட ஒரு தலைகுணிவு வரலாற்றுச் சிறப்புமிக்க அவையில் வேறெதுவும் கிடையாது. நிச்சயம், முதல்வர் அதற்கு பதில் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

அதேபோல அரசுக் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான் இல்லை என்று முதல்வர் சொல்லும்போது, அனைவரும் வரவேற்றார்கள். ஆனால், இன்றைக்கு அவருடைய ராஜகுருவாக இருக்கும் ரத்தன் பண்டிட் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்ததை தமிழக மக்கள் சார்பாக இந்த அவையில் குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளேன். அப்படி, அவர் உங்கள் ராஜகுருவாக இருந்தால் நீங்கள் PERSONAL ஆக வைத்துக்கொள்ள வேண்டும். அவரை, அரசு உயர் பதவியில் கொண்டு வந்தது ஏற்புடையதல்ல. இதன் மூலம் உங்களை நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன செய்தியைச் சொல்கிறீர்கள் என தெளிவுபடுத்த வேண்டும். என்ன உதாரணத்தைச் சொல்கிறீர்கள்? என்ன வரலாற்றைச் சொல்ல விரும்புகிறீர்கள்? வருங்கால இளைஞர்களுக்கும் எதிர்காலத்திற்கும் என்ன அறிவுரை சொல்லப் போறீர்கள் என்பதை நீங்கள் நிச்சயம் சொல்ல வேண்டும்” என தவெக அரசு ஆதரவு கோரும் தீர்மானத்தில் பேசிய அவர், தனது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவிக்காது பேசி அமர்ந்தார்.