தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் தவெக, இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. எனினும், அவ்வாட்சியிலும் சட்டம் ஒழுங்கு குறித்து நாளுக்கு நாள் எதிர்க்கட்சிகளால் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தின் அடுத்த டிஜிபி ரேஸில் மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
டிஜிபி பொறுப்பிற்கு நியமிக்கப்படுபவர்கள் தகுதி, வயது மற்றும் பணிக்காலம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி தகுதியுள்ள காவல் துறை அதிகாரிகளின் பெயரை தமிழக அரசு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு பரிந்துரைக்கும். புதிய டிஜிபியைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் யுபிஎஸ்சி தலைவர் தலைமையில் நடைபெறும். அதில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் என 3 செயலர்கள் பங்கேற்பர். அதில் டிஜிபி பதவிக்கு 3 பேர் இறுதி செய்யப்பட்டு ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அதன்படி, ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மற்றும் மகேஷ்குமார் அகர்வால் ஆகிய 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது.
இவர்களில் ஒருவர், ஓரிரு நாட்களில் புதிய சட்ட ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில், 1992-ஆம் பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ராஜீவ் குமார் மிக நீண்ட பணிமூப்பு கொண்டவர். தவிர, பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சந்தீப் ராய் ரத்தோரைப் பொறுத்தவரை சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 1994ஆம் பேட்ச்-ஐச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால் மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றில் உயர்மட்டப் பொறுப்புகளை வகித்தவர் ஆவார்.