தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் (77) இன்று நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியை சேர்ந்த இவரை பற்றிய விவரம் வருமாறு:
1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி பிறந்த புரோஹித் ஆரம்பத்தில் ஃபார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார். இந்தக் கட்சியில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், பிறகு காங்கிரசில் சேர்ந்தார். முன்னதாக இந்திரா காங்கிரஸ் உருவானபோது, 1978ல் நாக்பூர் கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவானார். 1980ல் நாக்பூர் தெற்கு தொகுதியில் இருந்து மீண்டும் எம்எல்ஏ ஆனார். அப்போதைய அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.
1984, 1989ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் நாக்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அயோத்தி ராமர் கோயில் இயக்கத்தின்போது பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 1991ல் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு நாக்பூரில் தோல்வியடைந்தார். 1996 ஆம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு மக்களவை எம்பியானார்.
1999ல் பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜனுடன் கருத்து வேறுபட்டு, வெளியேறி காங்கிரசில் சேர்ந்தார். பின்னர்,1999ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 2003ல் விதர்பா ராஜ்ய கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். 2009ல் மீண்டும் பா.ஜ.க. சார்பில் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரசிடம் தோல்வி கண்டார்.
2016ல் மேகாலயா ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். நாக்பூரைச் சேர்ந்த தி ஹிந்துத்வா என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும் பன்வாரிலால், நாக்பூரில் பொறியியல் கல்லூரியின் தலைவராகவும் உள்ளார்.