பாமக தலைவர் யார்? ஜி.கே. மணி படித்த அந்த தீர்மானம்.. அதிர்ந்த அரங்கம்! PT News
தமிழ்நாடு

பாமக தலைவர் யார்? ஜி.கே. மணி படித்த அந்த தீர்மானம்.. அதிர்ந்த அரங்கம்!

ராமதாஸ் வந்தவுடன் தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை அய்யா முடிவே இறுதியானது என்ற பேனரை திடீரென தொண்டர்கள் கையில் எடுத்து காட்டினர். அப்போது அரங்கமே அதிர்ந்தது..

Vaijayanthi S

புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள் காந்திமதி கலந்து கொண்டுள்ளார். அத்துடன் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 4,000 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

இதற்கு முன்னதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நடந்தது.. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த ஓராண்டுக்கு தலைவர் பதவியில் அன்புமணி நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மருத்துவர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது..

இந்நிலையில், இன்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக பாமகவில் புதிய விதி 35 உருவாக்கம் செய்யப்பட்டு, அதன்மூலம் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கு தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் டாக்டர்.ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் டாக்டர் ராமதாசிற்கு மட்டுமே வழங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இனி பாமக தலைவர் ராமதாஸ் தான் கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பார் என்று பொதுக்குழுவில் ஜி.கே மணி சொன்னார்.