தமிழகத்தில் திமுக அதிமுக அல்லாத மூன்றாவது அணி என்ற ஒரு காலகட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முத்தரசன். தொடர்ந்து 2019, 2022 ஆம் ஆண்டு அவரே மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியை வழிநடத்திச் சென்றார்.
இந்த நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மாநில குழு நிர்வாகிகள் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநில செயலாளர் முத்தரசன் 75 வயதை எட்டியுள்ளது மற்றும் மூன்று முறை மாநில செயலாளர் பொறுப்பு வகித்த காரணத்தால் கட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர் மாற்றம் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அரசியல் சிக்கல்கள் நிறைந்த காலகட்டத்தில் சரியான முடிவுகளை எடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை மேற்கொண்டவர் என்ற அடிப்படையில் கட்சியின் தேசிய தலைமை அவரை இப்பொறுப்பில் நீட்டிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இது ஒரு புறமிருக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்த மாநில தலைமையை தேர்வு செய்வதில் மூன்றில் ஒரு பங்கு மாநில நிர்வாகிகள் ஆதரவளித்தால் மீண்டும் முத்தரசனே தொடருவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தற்போதய மாநில செயலாளர் என்ற முறையில் அடுத்த தலைமை யாருக்கு என்பதை முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முத்தரசனே முன்மொழிய வாய்ப்புள்ளதாகவும் வருகிறது.
அப்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து முத்தரசன் விடுவிக்கப்பட்டால் அடுத்த தலைமை பொறுப்பை ஏற்கப் போவது யார் என்பதும் உற்று நோக்கப்படுகிறது. தற்போதுள்ள நிர்வாகிகளில் துணை நிர்வாக பொறுப்பில் உள்ள வீரபாண்டியன், சந்தானம்,,பெரியசாமி ஆகியோர் பெயர்கள் இதில் அடிபடுவதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் நோக்கங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மாநாட்டின் ஒரு பகுதியாக 'வெல்க ஜனநாயகம்' என்ற தலைப்பில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த தலைப்பிற்கு மற்றொரு அர்த்தம் 'வீழ்க சனாதனம்' என்று குறிப்பிட்டு பேசினார். தற்போது ஜனநாயகத்திற்கும் சனாதனத்திற்கும் இடையே நடக்கும் போரில் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பது இடதுசாரி இயக்கங்களின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். இப்படி ஒரு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமைக்கு கூடுதல் பொறுப்பும் உள்ளதை கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு அரசியலுக்கு மட்டுமல்ல கட்சிக்கும் முக்கியமானதாக உள்ளது. இந்த மாநாட்டின் முடிவில் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து முத்தரசன் விடுவிக்கப்பட்டு, புதிய செயலாளர் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டு சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்டு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ன செய்யப் போகிறது? என்ற கேள்விக்கான விடை ஆகஸ்டு 18ஆம் தேதி தெரியவரும்..