Vijay, Ezhilan Naganathan pt web
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் குறிப்பிட்ட திமுக எம்.எல்.ஏ. யார்?.. அவர் பேசியது என்ன?

காஞ்சிபுரம் ”மக்கள் சந்திப்பு” நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய், “தவெகவினரை தற்குறிகள் என்று சாடுவதற்கு எதிராக திமுக மேடையில் அக்கட்சியின் எம்எல்ஏ ஒருவரே பேசினார்” எனப் பேசியியுள்ளார். அந்த திமுக எம்.எல்.ஏ. யார்? அவர் பேசியதுதான் என்ன?

PT WEB

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய தவெக தலைவர் விஜய், “தவெகவினரை தற்குறிகள் என்று சாடுவதற்கு எதிராக திமுக அறிவுத் திருவிழா மேடையில் திமுக எம்.எல்.ஏ. ஒருவரே பேசினார்” என்றும் ”அவர் தவெகவின் கொள்கை முன்னோடிகளில் ஒருவரான அஞ்சலையம்மாளின் உறவினர்” என்றும் குறிப்பிட்டது, பேசுபொருளாகியுள்ளது. விஜய் குறிப்பிட்ட அந்த திமுக எம்.எல்.ஏ. யார்? உண்மையில் அவர் பேசியதுதான் என்ன? என்பதைப் பார்க்கலாம்.

திமுகவின் கொள்கை பிடிப்பு மிக்க இளம் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் எழிலன் நாகநாதன் தான் தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரம் கூட்டத்தில் குறிப்பிட்ட அந்த எம்.எல்.ஏ. அடிப்படையில் மருத்துவரான எழிலன் பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

எழிலனுடைய தந்தை நாகநாதன் புகழ் பெற்ற பொருளியல் பேராசிரியர். சமூகநீதி குறித்தும், கூட்டாட்சி குறித்தும் அரை நூற்றாண்டுக்கும் மேல் தொடர்ந்து எழுதிவரக் கூடியவர். தீவிரமான திராவிட இயக்கப் பற்றாளர். தன்னுடைய குடும்பத்திலேயே சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தவர். மூடநம்பிக்கைகளை உறுதிபட எதிர்ப்பதோடு, வீட்டு விசேஷங்களையே கெட்ட நேரம் என்று பலரும் கருதக்கூடிய ராகு காலத்தில் நடத்திக் காட்டியவர்.

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மனசாட்சி என்று சொல்லப்படும் முரசொலி மாறனுக்கு அடுத்த நிலையில், உள்ளதை உள்ளபடி நேருக்கு நேர் கருணாநிதியிடமே சொல்லிவிடக் கூடியவர். கருணாநிதி நல்ல உடல்நிலையில் இருக்கும்வரை அன்றாடம் அதிகாலையில் அவரோடு நடைப்பயிற்சி சகாவாக உடன் சென்றவர் நாகநாதன். மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவராக நாகநாதனை அமர்த்தி அவருடைய அறிவாற்றலுக்கு மரியாதை செய்தார் கருணாநிதி. நாகநாதனின் பிள்ளைகளும் அவர் தடத்தையொட்டியே வளர்ந்தனர்.

அப்படி வளர்ந்தவர்தான் எழிலன். கருணாநிதியின் கடைசி காலத்தில் அவருக்கு குடும்ப மருத்துவராகவும் இருந்தவர் எழிலன். தீவிரமான கொள்கைப் பற்றாளர். முதல்வர் ஸ்டாலினுக்கு நாகநாதன், எழிலன் இருவர் மீதுமே பெரும் மரியாதை உண்டு. தவெக இன்று தன்னுடைய கொள்கை முன்னோடிகளில் ஒருவராகப் போற்றும் அஞ்சலையம்மாள் இந்திய விடுதலைப் போராட்ட தளகர்த்தர்களில் ஒருவர். இந்த அஞ்சலையம்மாளின் மகள் லீலாவதி - மார்க்சிய சிந்தனையாளர் ஜமதக்னி தம்பதியின் மகள் வழி கொள்ளுப்பேரன்தான் எழிலன்.

சட்டமன்ற உறுப்பினரான எழிலன் திமுக அறிவுத் திருவிழாவில் பேசுகையில், “தற்குறி என்று நாம் யாரையும் குறிப்பிடலாகாது. தற்குறிகள் என ஒடுக்கப்பட்ட இளைஞர்களை விமர்சனம் செய்வது தவறு. இளைஞர்களிடம் சென்று பேசாதது நமது தவறு. நாம் அவர்களுக்கு சமூக நீதி அரசியலை சொல்லித்தரவில்லை.

எழிலன் நாகநாதன்

தவெக தொண்டர்கள் சங்கிகள்அல்ல; நாம் அவர்களிடம் உரையாட வேண்டும்” என்று தெரிவித்தார். இதைக்குறிப்பிட்டுத் தான் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசினார் தவெக தலைவர் விஜய்.

அதேசமயம், விஜய்க்கோ, தவெகவுக்கோ ஆதரவாக அவர் பேசவில்லை. அரசியலுக்கு புதியவர்களான இளைஞர்களை அரவணைக்க வேண்டும் என்றே பேசினார். எழிலனின் பேச்சை தனக்கேற்றபடி விஜய் வளைத்துவிட்டார் என்கிறார்கள் திமுகவினர்!