தமிழ்நாடு

தூங்கா நகரத்தை ஆளப்போகும் மாநகராட்சி மேயர் யார்? - விவாதத்தை உண்டாக்கிய தேர்தல் களம்

கலிலுல்லா

மாநகராட்சி மேயர் என்ற பதவியை அடைய அனைத்துக் கட்சியினரும் முனைப்புடன் செயல்படுவர். இருப்பினும் மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் அதிமுகவைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

தூங்கா நகரமான மதுரையில் மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில், அதிமுக தீவிர பரப்புரையில் ஈடுபட்டாலும், மேயர் வேட்பாளர் யார்? என்பது விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

இந்த முறையும் மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தொடக்கத்தில் மேயர் வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது மகளை நிறுத்தவும், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா மருகளுக்கும் சீட் கேட்டும் நெருக்கடி கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது. இது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், ஆளும் கட்சியாக இருக்கும் திமுக பெரும் சவாலாக இருப்பதால், இருவரும் தங்கள் முடிவில் இருந்து பின் வங்கியதாக கட்சியினர் கூறுகின்றனர்.

இதனால் அதிமுகவில் அடுத்த மேயர் வேட்பாளர் யார் என நிர்வாகிகள் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், அதிமுக இடங்களை வென்றால் ஏற்கனவே 2முறை மாநகராட்சி வார்டு உறுப்பினராக இருந்த சண்முகவள்ளிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஏற்கனவே மாமன்ற உறுப்பினர்களாக இருந்த சுகந்தி அசோக், சண்முகப்பிரியா ஆகியோர்களில் ஒருவருக்கும் மேயர் வாய்ப்பு கதவை தட்டலாம் என அதிமுக நிர்வாகிகள் தரப்பில் கூறுகின்றனர்.