சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஞானசேகரனை கோட்டூர்புரம் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நபரிடமிருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், சம்பவத்தின்போது போனில் யாரோ ஒருவரிடம் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியிருப்பது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்தச் சமயத்தில், “சார்” என ஞானசேகரன் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அப்படி எனில், ஞானசேகரனின் தொடர்பில் இருந்த அந்த 'சார்' யார் என போலீசார் தீவிரமாய் விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும், அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் ஞானசேகரனின் தொடர்பில் மற்றொரு நபர் இருந்தது மாணவி புகாரின் மூலம் அம்பலமாகியுள்ளது. தன்னை மிரட்டிக்கொண்டிருந்த, ஞானசேகரனை ஒருவர் மொபைலில் அழைத்ததாகவும் அவரிடம் அவளை மிரட்டி விட்டுவிடுவேன் என ஞானசேகரன் சொன்னதாகவும் மாணவி புகார் அளித்துள்ளார். “அந்த சாரிடமும் சிறிது நேரம் நீ இருக்க வேண்டும்” என ஞானசேகரன் தன்னை மிரட்டினார் என மாணவி புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ஞானசேகரனை போனில் அழைத்த அந்த 'சார்' யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.