தமிழ்நாடு

கட்சிக்கு ஓபிஎஸ்... ஆட்சிக்கு இபிஎஸ்?

கட்சிக்கு ஓபிஎஸ்... ஆட்சிக்கு இபிஎஸ்?

webteam

கட்சியை ஓ.பன்னீர்செல்வமும், ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனி செல்வமும் நிர்வகிக்கப் போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக அம்மா அணியில் கடந்த ஒரு மாதகாலமாகவே சசிகலா குடும்பத்தினரை விலக்கி வைக்க கனன்று கொண்டிருந்த நெருப்பு பற்றி தீயாக கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இதன் முன்னோட்டத்தை இம்மாத முதல் வாரத்தில் புதிய தலைமுறையின் அக்னிப்பரிட்சைக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாகவே கூறியிருந்தார் டிடிவி.தினகரன்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை, அதனைத்தொடர்ந்து ரத்தான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என ஆளும் அதிமுகவில் அடுத்தடுத்த அதிர்வுகள் அரசியல் களத்தை அதிர வைத்தன. எனினும், கட்சிக்குள் மூண்ட பூசல் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் தேதிதான். டிடிவி.தினகரன் இல்லத்திற்கு அமைச்சர்கள் வந்தபோது அவரை கட்சியில் இருந்து விலகி இருக்குமாறு அமைச்சர்கள் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. பூசல் வெடித்தநிலையில் அன்றைய தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன், அனைத்தையும் மறுத்தார். இந்தச்சூழலில் திருச்சியில் அமைச்சர்கள் சிலர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த ஆலோசனைகள் அரங்கேற, கடந்த இருதினங்களாக அதிமுக அம்மா அணியிலும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியிலும் முக்கிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இரட்டை இலையை மீட்டெடுக்கவேண்டும், கட்சியையும், ஆட்சியையும் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்ற ஒற்றைப்புள்ளியில் அதிமுக அம்மா அணி இணைப்பு முயற்சிகளை மேற்கொள்ள, அதற்கு ஓபிஎஸ் தரப்பில் இருந்து இசைவான பதிலே வந்தது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், ஓபிஎஸ் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தார். இதையடுத்து கடந்த 17 ஆம் தேதி அமைச்சர் தங்கமணி வீட்டில் கூடி அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு சில நிபந்தனைகள் விதித்தார் ஓ.பிஎஸ்.

நிபந்தனைகளை ஏற்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று ஜெயக்குமார் பேட்டியளித்தபோதே, தினகரன், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க தயாராகிறதா அதிமுக அம்மா அணி? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள், சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து செங்கோட்டையனும், திண்டுக்கல் சீனிவாசனும், டிடிவி.தினகரனை சந்தித்து பேசினர். அப்போது கட்சியில் இருந்து விலக முடியாது என தினகரன் கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் டிடிவி.தினகரனை எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோர் சந்தித்தனர். இந்நிலையில் மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் அடுத்த திருப்பமாக கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கும் முடிவு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தான், நேற்றே விலகிவிட்டேன். எதற்கோ பயந்து அமைச்சர்கள் நடந்துகொள்கிறார்கள் எனக் கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பிஎஸ், சசிகலா குடும்பத்தினர் ஒதுக்கப்பட்டது தர்ம யுத்தத்திற்கு கிடைத்துள்ள முதல் வெற்றி எனக் கூறினார். இந்நிலையில், இனி கட்சியில் தனிநபர் முடிவுகள் அல்லாமல் குழு முடிவுகளே எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் விரைவில் இணைந்து ஒரணியாவற்கான பேச்சுவார்த்தைக்கு ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் பின்னர் கட்சியை வழிநடத்த இருஅணிகளின் சம பிரதிநிதித்துவத்துடன் உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்றும், கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி என கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.