பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன், தற்போது கட்சியின் மாநில தலைவராக மாறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அக்கட்சியில் யார் அடுத்த சட்டமன்ற குழுத் தலைவர் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவுற்றதைத் தொடர்ந்து, தேர்தல் அறிவிக்கப்பட்டு புது தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது கட்சியில் பணியாற்றியவர்கள் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நயினார் நாகேந்திரன் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் போட்டியே இல்லாமல் தமிழக பாஜக தலைவராக ஒருமனதாக தேர்வாகி இருக்கிறார்.
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்றபிறகு, பாஜக சட்டமன்றக் குழு தலைவராக நயினார் நாகேந்திரன் இருந்து வந்தார். அவர் இப்போது பாஜக மாநில தலைவராக மாறி இருப்பதால், அக்கட்சியின் விதிகளின்படி ஒருவர் இரு பதவிகளில் இருக்க முடியாது. இதனால், சட்டமன்ற குழுத் தலைவராக வேறொருவர் நியமிக்கப்பட வேண்டும். சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்களை மட்டுமே நியமிக்க முடியும். அப்படிப் பார்த்தால், 2021ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் வென்றது. நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், காந்தி மற்றும் சரஸ்வதி ஆகிய நால்வர்தான் அந்த வெற்றியாளர்கள்.
இதில் நயினார் தலைவராவதால், மற்ற மூவரில் ஒருவர் சட்டமன்ற குழுத் தலைவர் ஆவார். இந்த லிஸ்ட்டில் காந்தி, சரஸ்வதி நியமிக்கப்பட வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதால், தலைவர் ரேஸிலேயே இடம்பெற்ற வானதி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றவர்களைத் தாண்டி கட்சியில் செல்வாக்கு மிகுந்த நபராக இருப்பதால், பாஜகவின் அடுத்த சட்டமன்ற குழுத் தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சட்டப்பேரவையில் நடக்கும் விவாதங்களின்போது, புள்ளிவிவரத்தோடு பதிலளிக்க வேண்டும் என்பதால், வானதியே நியமிக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.