இன்பதுரை, தனபால் fb
தமிழ்நாடு

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு.. தேமுதிகவுக்கு கல்தா.. யார் இந்த இன்பதுரை, தனபால்?

அதிமுக சார்பாக மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான செய்யூர் தனபால் ஆகியோர் போட்டியிடப்போவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.

திவ்யா தங்கராஜ்

வருகின்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அதிமுக அறிவித்தது. தேமுதிக உடனான கூட்டணி தொடர்கிறது எனவும், 2026-ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலின் போது தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படும் எனவும் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடைபெற உள்ளது. அதிமுக சார்பாக மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான செய்யூர் தனபால் ஆகியோர் போட்டியிடப்போவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக கூட்டணயில் தொடர்வதாகவும், 2026 ஆம் ஆண்டு மாநிலங்களவை பதவி தேமுதிகவிற்கு கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் என்.சந்திரசேகரன் மற்றும் அதிமுக அணியில் இருந்த பாமக அன்புமணி ராமதாஸ் இருவரது பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்களை அதிமுக அறிவித்தது. பலரது பெயர்கள் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

திமுக வேட்பாளர்களாக பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இன்பதுரை

அதிமுகவில் மூத்த வழக்கறிஞரான இன்பதுரை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 49 ஓட்டுகளில் வெற்றிபெற்றார். மீண்டும் 2021ல் நடைபெற்ற ராதாபுரம் தொகுதியில் தற்போதைய சபாநாயகர் அப்பாவுவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதிமுகவின் வழக்கறிஞர் அணியின் செயலாளராக இருக்கும் இன்பதுரை, அதிமுக பொதுக்குழு பிரச்சனை, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் வாதாடி இருக்கிறார். திமுக சார்பாக மூத்த வழக்கறிஞரும் கிறிஸ்தவருமான பி.வில்சன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதே போல அதிமுகவில் மூத்த வழக்கறிஞரும் கிறிஸ்தவருமான இன்பதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தனபால்

அதிமுகவின் மற்றொரு வேட்பாளரான தனபாலை பொறுத்தவரை, அவர் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் மற்றும் செய்யூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். 2006 சட்டமன்ற தேர்தலில் திருப்போருர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர். மாவட்ட நிர்வாக குழு முன்னாள் தலைவராக இருந்தவர். கவுன்சிலராக பணியாற்றி வரும் தனபாலுக்கு தற்போது ராஜ்யசபா சீட் கிடைத்துள்ளது. இவர் முன்னாள் சபாநாயகர் தனபால் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் பதவிக் காலம் முடிவடையும் எம்பி சந்திரசேகரன், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பட்டியலின, தேவேந்திர குல வேளாளர் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் பேசப்பட்டது. குறிப்பாக முன்னாள் எம்.எல்.ஏக்களான சதன் பிரபாகரன், செய்யூர் தனபால், சங்கரன்கோவில் ராஜலட்சுமி ஆகியோரது பெயர்கள் பேசப்பட்டு வந்தது. தற்போது அறிவிக்கப்பட்ட செய்யூர் தனபால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்.