குரூஸ் பர்னாந்தீஸ்
குரூஸ் பர்னாந்தீஸ் pt desk
தமிழ்நாடு

யார் இந்த குரூஸ் பர்னாந்தீஸ்.. தூத்துக்குடியின் தந்தை என அழைக்கப்படுவது ஏன்? அப்படி என்ன செய்தார்?

webteam

தூத்துக்குடியில் வாழ்ந்த ஜான்சாந்த குரூஸ் -பெர்னாண்டஸ் தம்பதியருக்கு மகனாய் 15.11.1869-இல் பிறந்தவர் குரூஸ் பெர்னாண்ட்ஸ். தூய சவேரியார் பள்ளியில் அன்றைய மெட்ரிகுலேசன் படிப்பை முடித்த இவர், முதலில் சர்தார் சேட்டிடமும், பின்னர் வால்காட் நிறுவனத்திலும் எழுத்தராக பணியற்றினார். வால்காட் பஞ்சுக் கம்பெனியில் வரும் வருமானத்தை சேர்த்து வைத்து ஏழைப்பிள்ளைகளின் கல்விக்காக செலவழித்தார் குருஸ் பெர்னாண்டஸ். கம்பெனியின் தூசுகளின் விளைவுதான் இளமையிலேயே அவரை 'ஆஸ்துமா' பற்றிக் கொண்டது.

name board

தொபியால் அம்மாளை மணந்து இல்லறம் நடத்தி, ஏழு குழந்தைகளின் தந்தையான இவர், தமது கடின, உழைப்பினால் வால்கார்டு நிறுவனத்தில் ராலி ஆபீஸ் புரோக்கராகவும், பின்னாளில் மேலாளராகவும் பதவி உயர்வு பெற்றார். பொதுத் தொண்டில் பெரிதும் ஈடுபாடு கொண்டு விளங்கிய குருஸ் பெர்னாண்டஸ் 1909இல் தூத்துக்குடி நகராட்சி தலைவராக பொறுப்பேற்ற போது, தூத்துக்குடி மக்கள் சுத்தமற்ற கிணற்றுக் நீரைதான் குடிநீராக குடித்தும் சமையலுக்கும் பயன்படுத்தி வந்தனர். அப்போதெல்லாம் காலரா, பிளேக் போன்ற நோய்கள் பதிக்கப்பட்ட பலர் சர்வ சாதாரணமாக உயிரிழந்தனர். இத்தகைய மரணங்களுக்கும், நோய்களுக்கும் சுகாதாரமற்ற –குடிநீர் தான் காரணம் என்று உணர்ந்த குரூஸ் பெர்னாண்டஸ் சுத்தமான குடிநீர் வழங்குவதே தனது முதற்கடமை என செயல்பட்டார்.

ஏறத்தாழ 30 ஆண்டு காலம் நகரமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை நகரமன்றத் தலைவராகவும் இருந்த இவர், ஜாதி மத பேதமின்றி அம்மாவட்ட அடித்தள மக்களின் அடிப்படைக் கல்வி மேம்பாடு, குடிசை வீடுகள் மேம்பாடு, தீண்டாமை எதிர்ப்பு, கூட்டுறவு வங்கிக் கடனுதவி, சுகாதார மையங்கள், சனிக்கிழமை சந்தை, அங்காடிகள், பொதுவான கல்லறைத் தோட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தினார். 1927ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்தபோது, தொலைநோக்குப் பார்வையுடன், நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வெற்றி பெற்றார். அந்த திட்டம் தூத்துக்குடி மக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது. இதனால் அம்மாவட்ட மக்களின் மனங்களில் உயர்ந்து நிற்கும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்-க்கு தூத்துக்குடி தமிழ் சாலையில் சிலை அமைக்கப்பட்டது.

water connection

அதன் பின், வருடம் தோறும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.. பின்னர், இவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று குரூஸ் பர்னாந்து பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 24.03.2020-ல் சட்டப் பேரவையில் அறிவித்தார். அதன் பின் அரசு விழாவாக, கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். பூங்கா அருகில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜனவரி மாதம் 21ந் தேதி நடைபெற்றது.

இதையடுத்து ரூ.77.87 லட்சம் மதிப்பில் 376 சதுரடி பரப்பில் முழு உருவச்சிலையுடன் கூடிய மண்டபமும், மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பேவர் பிளாக், புல்வெளி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து குரூஸ் பர்னாந்தீஸ் பேத்தி ரமோலவாஸ் கூறுகையில், தாத்தா அந்த ஊர் மக்களுக்காக பல நல்லது செய்திருக்கிறார். மக்கள் அனைவரும் இணைந்து குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனை நிறைவேற்றித் தந்த அரசுக்கு எங்கள் குடும்பம் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Manimandapam

அதனை தொடர்ந்து, அண்டோ கூறுகையில்... தூத்துக்குடியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ், இவர் தூத்துக்குடியில் அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்றி தந்தவர்.. குடிசை வீடுகளை கட்டடங்களாக மாறுவதற்கு ஒரு கூட்டுறவு வங்கி, அனைத்து சமூக மக்களின் குழந்தைகள் கல்வி பெறுவதற்கு சின்னமணி நாடார் உடன் இணைந்து கல்வித்திட்டம், புதிய குடியேற்ற வட்டக்கிணறு அமைத்து தருதல், குக்கிராமமாக இருந்தாலும் கூட தண்ணீர் கிடைக்காத ஒரு பகுதியாக இருந்த அன்றைய தூத்துக்குடிக்கு பல்வேறுகட்ட முயற்சிகளுக்கு அடுத்து அந்தப் பணியை நிறைவேற்றும் வகையில் தினமும் தனது குதிரை வண்டியில் வேலை நடைபெறும் இடங்களை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வல்லநாட்டில் இருந்து தாமிரபரணி தண்ணீரை இந்த மாநகரத்திற்கு தந்தவர் குரூஸ் பர்னாந்தீஸ்.

ஏனென்றால் அதற்கு முன்பாக தூத்துக்குடிக்கு இலங்கையில் இருந்து தோனி மூலமாகவும் கடம்பூரில் இருந்து இரயில் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வந்தனர். அப்படிப்பட்ட ஒரு குடிநீர் பஞ்சத்தை போக்குவதற்கு ஒரு மகத்தான திட்டத்தை கொண்டு வந்த ஒரு மாமனிதனுக்காக கட்டியுள்ள மணிமண்டபத்தை நாளை காலை 11 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்பது தூத்துக்குடி மக்களுக்கு ஒரு பெருமை தான் என்றார்.