தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்து செல்ல இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் யார் ?

webteam

மக்களவைக்கான தேர்தல் முடிந்த நிலையில், அடுத்து மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கவிருக்கிறது.250 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் கலை, கல்வி, அறிவியல், விளையாட்டுதுறை உள்ளிட்டவற்றில் சிறந்த விளக்கும் 12 பேரை நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமிப்பார். ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அவர்களது பதவி காலம் 6 ஆண்டுகள்.

தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரை 234 உறுப்பினர்களில், திமுகவிற்கு 110 பேரும், அதிமுக மற்றும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற 3 பேரையும் சேர்த்து 123 பேர் உள்ளனர். டிடிவி தினகரன் சுயேட்சை உறுப்பினராக உள்ளார். அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளும் இந்த முறை தலா 3 உறுப்பினர்களை மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும்.

அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக முடிவுசெய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 மாநிலங்களை உறுப்பினர்கள் பதவிக்கு யார் யாரை அனுப்ப போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஒபிஎஸ் தரப்புக்கு ஒன்று, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒன்று என 2 உறுப்பினர்களை தேர்வு செய்யப்போகிறார்கள் என பேசப்பட்டு வருகிறது.

இப்போதைக்கு இந்த போட்டியில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த கே.பி.முனுசாமி, கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தம்பிதுரை,நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மனோஜ்பாண்டியன், ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருக்கின்ற மைத்ரேயன் ஆகியோர் இருக்கின்றனர்.

திமுகவை பொறுத்தவரையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மதிமுகவிற்கு தரப்படும் என கூட்டணி ஒப்பந்தந்தில் முடிவு செய்யப்பட்டுவிட்டதால், மீதமிருக்கும் அந்த 2 பதவிக்கு திமுக வழக்கறினர் என்.ஆர். இளங்கோ,தொமுச பேரவையின் செயலாலர் சண்முகம், திமுகவின் வழக்கறிஞர் அணியில் இருக்கும் வில்சன் ஆகிய மூவரில் இருவரை திமுக தரப்பில் மாநிலங்களவைக்கு அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.