மிக்ஜாம் புயல் எதிரொலியாக கொட்டித்தீர்த்த கனமழையால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை மயிலாப்பூர் அப்பாசாமி தெருவில் உள்ள மாநகராட்சியின் சலவைத்துறையில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சலவைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் இவர்களது வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ளது. தினசரி வருமானத்தை நம்பி வாழும் இவர்கள், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப்பணிக்காக யாரும் இங்கு வரவில்லை என்று வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் பேசுகையில், “நாங்கள் யாரிடம் சென்று குமுறுவது? எங்கும் சென்று பிச்சைகூட எடுக்க முடியாது. ஒருநாள் குடும்ப செலவு 500 ரூபாய் ஆகும். அரசாங்கம் எங்களை கண்டுகொள்ளவில்லை. எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
மற்றொருவர் பேசுகையில், “எங்களுக்கு வீடுகட்டித்தர வேண்டும் என்று 2 வருடங்களாக கோரிக்கை வைத்துள்ளோம். மாநகராட்சியில் இருந்து யாரும் இதுவரை வரவில்லை. மீண்டும் தொழிலை தொடங்க, அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.