தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கே அமைக்கப்படும் என்பது பற்றி பதில் தர மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் உயர்நீதிமன்ற கிளையில் மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டுள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அனைக்கப்படும் என்ற தகவலை வெளியிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையில், தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள மதுரை மாவட்டம் தோப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, ஈடோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய இந்த ஐந்து இடங்களில் எந்த இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யப்போகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்கனவே கேட்டிருந்தது.
ஆனாலும் மத்திய அரசு எய்ம்ஸ் எங்கே அமைக்கப்படும் என்பது தெரிவிக்காத நிலையில் கே.கே ரமேஷ் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருந்தார். அது தொடர்பான வழக்கில் இன்று மத்திய அரசின் சார்பில் குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் சஞ்சய்ராய் என்பவர் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் வரும் 18ம் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கே அமைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், தமிழக அரசு கொடுத்துள்ள ஐந்து இடங்களில் எதை தேர்வு செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அதில் விமான வசதி, இரயில் வசதி உள்ள இடங்கள் குறித்து முழுமையாக ஆராய்ந்து அதன் பின் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் இது பற்றி பதில் தர மேலும் 3 மாதம் அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.