தமிழ்நாடு

முகிலன் எங்கே.? கமிஷனர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

rajakannan

மாயமானதாக கூறப்படும் சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களின் அமைப்புகளில் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார். 

செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை காணவில்லை என்று கூறப்படுகிறது. ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், 5 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை.

முகிலன் மாயமானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது. இதனிடையே, முகிலன் எங்கே? என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ட்விட்டரில் #WhereIsMugilan என்ற ஹேஷ்டேக்கில் பலரும் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாயமான முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அறப்போர் இயக்கம், செம்மை சமூகம், டிசம்பர் 3 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல், பல்வேறு அமைப்புகள் சேர்ந்து சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்ப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் முகிலனை கண்டுபிடித்து தர வலியுறுத்தி புகார் மனுவும் அளிக்கப்பட்டது. தமிழக ரயில்வே காவல்துறை விசாரிப்பதாகவும் அவர்களுடன் இணைந்து சென்னை காவல்துறை பணியாற்றுவதாகவும் மனு அளித்த பின்னர் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.