தமிழ்நாடு

எப்போது நிறைவடையும் மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள்?

webteam

மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத்தின் திட்ட மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று வருடத்திற்குள் பாலத்தின் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக கிடப்பில் இருந்த மதுரவாயல் - சென்னை துறைமுகம் உயர்மட்ட விரைவு சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரத்திற்குள் மேம்பாலமாக செல்லும் இந்த இரட்டை அடுக்கு பாலத்தின் மாதிரி படம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரவாயில் வானகரம் "கிளே ஓவர்" பாலம் ஈரடுக்கு பாலமாக அமைய உள்ளது. அதாவது பெங்களூர் நெடுஞ்சாலை மற்றும் தாம்பரத்திலிருந்து செல்லும் வெளிவட்ட சாலையில் ஈரடுக்கு மேம்பாலம் தொடங்குகிறது.

கிளே ஓவர் பாலத்தின் ஈரடுக்காக அமைக்கப்பட்டுள்ளதால் சரக்கு லாரிகள் மற்றும் துறைமுகத்துக்கு செல்லும் லாரி மற்றும் பிரத்யேக கண்டெய்னர்கள் போக்குவரத்து நெரிசலின்றி விரைவுச் சாலையில் நுழைய முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஈரடுக்கு பாலத்தின் மேல் அடுக்கில் சரக்கு வாகனங்கள் செல்லும் வகையிலும், கீழ் அடுக்கில் 13 இணைப்பு வழிகளோடு மற்ற வாகனங்கள் செல்லும் வகையில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது.

நேப்பியர் பாலம் முதல் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் கூவம் ஆற்றின் பகுதிகளில் இரண்டு அடுக்கு மேம்பாலமாக கட்டப்படுகிறது. சென்னையின் அடையாளமாக கருதப்படும் நேப்பியர் பாலத்தின் மேற்பகுதியில் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ள துறைமுக விரைவுச் சாலையானது ஐ என் எஸ் அடையாறு தளத்தில் முடிவடைகிறது. இதற்காக ஐ.என்.எஸ். அடையார் பகுதியில் உள்ள கடற்படை குடியிருப்புகளை அகற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான பணிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்க உள்ளதாகவும் 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 115 தூண்களில் மதுரவாயல் சாலையில் உள்ள 85 தூண்கள் மட்டுமே பயன்படுத்த போவதாகவும் கூவம் ஆற்றில் உள்ள தூண்கள் அகற்றி புதிய தூண்களை நிறுவ உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- ந.பால வெற்றிவேல்