தமிழ்நாடு

“டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக மூடப்படும்?” - நீதிமன்றம் கேள்வி

“டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக மூடப்படும்?” - நீதிமன்றம் கேள்வி

Rasus

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக மூடப்படும்? என்பதை டாஸ்மாக் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில்," தஞ்சை பள்ளியக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதிப்படி டாஸ்மாக கடை அமைய உள்ள இடத்திற்கு 100 மீட்டருக்குள் கோயிலோ, கல்வி நிறுவனங்களோ இருக்க கூடாது.

ஆனால், பள்ளியக்கரஹாரத்தில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடம் அருகே, பேருந்து நிலையம், மாநகராட்சி அரசுப் பள்ளியும், தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியும், பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்கள், மாணவர்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் இடையூறாக அமையும். ஆகவே, பள்ளியக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, தஞ்சை பள்ளியக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து தமிழக உள்துறை  செயலர், டாஸ்மாக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரை ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்தும் உத்தரவிட்டனர். தொடர்ந்து,

1. தமிழகத்தில் 2016-ல் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன?

2..தமிழகத்தில் 2016-க்கு பின்னர் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன? அவை  எத்தனை கட்டங்களாக மூடப்பட்டன?

3. 2016-க்கு பின் எத்தனை டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டன?

4. எத்தனை கடைகள் புதிதாக திறக்கப்பட உள்ளன?

5. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக  மூடப்படும்?

6. 2016 முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளால் கிடைக்கப்பெற்ற வருவாய் எவ்வளவு? உள்ளிட்ட விவரங்களை மாவட்ட வாரியாக அறிக்கை தர வேண்டும் எனவும் டாஸ்மாக்கின் தலைவர் மார்ச் 4-ல் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.