தமிழ்நாடு

தமிழும், சமஸ்கிருதமும் இரு கண்கள் என சொன்னதில் என்ன தவறு - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழும், சமஸ்கிருதமும் இரு கண்கள் என சொன்னதில் என்ன தவறு - அமைச்சர் பாண்டியராஜன்

rajakannan

தமிழும், சமஸ்கிருதமும் பாரதப்பாண்பாட்டின் இரு கண்கள் என்று நான் சொன்னதில் என்ன தவறு என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

தமிழ் மொழியின் தொன்மை குறித்து 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் மொழி 2300 ஆண்டுகள்தான் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளது பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, தவறான தகவல்கள் உடனடியாக நீக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டும் அழகிய கலை வடிவத்தை உள்ளடக்கிய இரண்டு மொழிகள். அவற்றுள் எந்த மொழி தொன்மையானது என்று ஆராய்வதை விட இரண்டு மொழிகளிலும் உள்ள சிறப்புகளை கருத்தில் கொள்ளவேண்டும். தமிழும் சம்ஸ்கிருதமும் கலையின் இரண்டு கண்கள். இரண்டையும் தனித்து பார்க்கமுடியாது” என்று கூறியிருந்தார். அமைச்சர் பாண்டியராஜனின் இந்த பேச்சு குறித்து சில விமர்சனங்கள் எழுந்தனர். 

இந்நிலையில், தான் சொன்னதில் என்ன தவறு என மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழும், சமஸ்கிருதமும் பாரதப்பாண்பாட்டின் இரு கண்கள் என்பதே நான் சொன்ன கருத்து. எது எதை விட மூத்தது, சிறந்தது என்ற அர்த்தமற்ற ஆய்வை விட்டுவிடுங்கள். 2 மொழிகளிலும் உள்ள பொக்கிஷங்களை உணர்ந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்” என தெரிவித்துள்ளார்.