அண்ணாமலை pt web
தமிழ்நாடு

தனிக்கட்சி? என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை? பாஜகவில் அடுத்த பரபரப்பு..!

தமிழக பாஜகவில் தனக்கென தனி கூட்டத்தை உருவாக்கிய அண்ணாமலை, சமீபகாலமாக அதிருப்தியில் இருப்பதாகவும், முக்கிய முடிவை எடுக்க இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Uvaram P

தமிழக பாஜகவில் தனக்கென தனி ஆதரவாளர்களை உருவாக்கிய அண்ணாமலை, சமீபகாலமாக அதிருப்தியில் இருப்பதாகவும், முக்கிய முடிவை எடுக்க இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், சேலத்தில் வைத்து அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் திறக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் பதவியை உதறிவிட்டு கட்சிக்குள் வந்தவர், அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2020ம் ஆண்டு பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, ‘அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். ”துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும் ” என்பதே குரலின் அர்த்தம். இந்த குரலுக்கு பிரதமர் மோடியே உதாராணம் என்று கூறியவர், பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை என்றும் கூறினார். ஆனால், அடுத்த ஆண்டே அதாவது, 2021ம் ஆண்டு ஜூலையில், அண்ணாமலைக்கு பாஜக மாநில தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. அதுமுதல், கடந்த ஏப்ரல் வரை தமிழக பாஜகவின் தலைவராக இருந்த அண்ணாமலை, பாஜகவை குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றார் என்று அரசியல் பார்வையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

அண்ணாமலை

2024 மக்களவைத் தேர்தலின்போது, பாஜக தலைமையில், தமிழ்நாட்டில் எண்டிஏ கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டவர், 40 இடங்களிலும் தோல்வியை சந்தித்தாலும், வாக்கு வங்கியை வெகுவாக உயர்த்தினார். அதன்படி, அந்த தேர்தலில் எண்டிஏ கூட்டணி வாங்கிய வாக்கு 18 சதவீதமாகும். இதில், பாஜகவின் வாக்கு சதவீதம் மட்டும் 11 சதவிதமாக இருந்தது. முன்னதாக, என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை சென்றது.. திமுக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிட்டது.. திமுக அரசை தொடர்ந்து தாக்கியது என்பது வரை, எதிர்க்கட்சி ரேஸில் போட்டி போட்டார் அண்ணாமலை. பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கையில், நாங்கள்தான் எதிர்க்கட்சி என்ற அளவுக்கு முழங்கினார்.

அண்ணாமலை தலைவரான பிறகு தமிழக பாஜகவில் இளைஞர்களுக்கு அதிக அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல வளரத்தொடங்கியது பாஜக. இப்படியான சூழலில்தான், அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு, அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. தலைவர் பதவி மாற்றப்பட்டபோதே, அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார் அமித்ஷா. ஆனால், அறிவித்து 4 மாதங்கள் கடந்தோடிய நிலையில், அண்ணாமலைக்கு பொறுப்பு ஏதும் வழங்கப்படவில்லை.

அமித்ஷா, அண்ணாமலை

இந்த நிலையில், தமிழக பாஜகவுக்குள்ளேயே அண்ணாமலைக்கு எதிராக அணி சேர்ந்து தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் என அண்ணாமலை தரப்புக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், அண்ணாமலைக்கு உரிய மரியாதை இல்லை எனவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமைக்கு கட்டுப்பட்டு அண்ணாமலை நடந்துகொண்டாலும், அவருக்கு ஆதரவாக தலைமை இல்லை என்றும், அனைவருமே அவர் மீதான வெறுப்பை உமிழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

"ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து பாஜகவில் இணைந்தவர், தமிழக பாஜகவில் சிங்கம் போன்று வலம் வந்தார். அவரை அவமதித்து கட்சியில் பொறுப்பு கொடுக்காமல் அமர வைத்ததோடு, அவருக்கு எதிராக ஐடி விங்.. வார் ரூம்கள் மூலம் வேலை செய்வதா?" என்று புலம்புகின்றனர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள். தேசிய அளவில் பாஜக ஒரு குடையின் கீழ் இருந்தாலும், தமிழக பாஜகவைப் பொறுத்தவரை, அண்ணாமலைக்கான தனி கூட்டம் ஒன்று உருவானது. அவரது தலைவர் பதவி பறிக்கப்பட்டபோது, அந்த கூட்டம் கடுமையாக எதிர்வினையாற்றியது குறிப்பிடத்தக்கது. கட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றவரை இப்படி அமரவைத்துவிட்டீர்களே என்றெல்லாம் அண்ணாமலை ஆதரவாளர்கள் குரல் எழுப்பினர்.

அண்ணாமலை

இந்த நிலையில்தான், தற்பொழுது அண்ணாமலை கட்சியில் இருந்து விலக முடிவு செய்ததாகவும், தனிக்கட்சி முடிவு வரை சென்றதாகவும், உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் உலா வந்தன. தனிக்கட்சி தொடங்குகிறீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, துவங்கும்போது சொல்கிறேன் என்று கடுகடுத்தபடி கூறி நகர்ந்தார் அண்ணாமலை. கடந்த நான்கு மாத கால இடைவெளியில், பாஜகவின் முக்கிய ஆலோசனை கூட்டங்களை புறக்கணித்திருக்கும் அண்ணாமலை, நயினாருக்கு எதிராக தனி ரூட்டில் பயணிக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நேரத்தில், கட்சியில் இருந்து விலகுவதோ.. தனிக்கட்சி தொடங்குவதோ அல்லது அரசியலில் இருந்து விலகுவதோ என்று அண்ணாமலை எந்த முடிவை எடுத்தாலும், அவர் முடிவுக்கு கட்டுப்பட தயார் நிலையில் இருப்பதாக கூறுகின்றனர் அவரின் ஆதரவாளர்கள். ஒருவேளை அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினால், அவருக்கான கூட்டம் அந்த கட்சியில் பயணிக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அண்ணாமலை

இதற்கிடையில்தான், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார் K.அண்ணாமலை Ex IPS ரசிகர் மன்றம் என்ற பெயரில் மன்றம் திறக்கப்பட்டுள்ள நிலையில், மன்ற பதாகையின் மேல்புறம் நேர்மை, புரட்சி, எழுச்சி ஆகிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் திறக்கப்பட்ட நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்களோ, ஆதரவாளர்களோ.. அண்ணாமலைக்கென தனி கூட்டம் இருப்பது உறுதியாகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் நெருங்கி பழகும் அண்ணாமலை, சமீபத்திய சந்திப்பில் கூட அடுத்தகட்ட நகர்வு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கட்டம் வரை பிரேக்கிங் செய்திகளை.. பரபரப்பை தன்னைச் சுற்றியே வைத்திருந்த அண்ணாமலை, இப்போது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.