தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து திமுகவுக்கு பணம் வருகிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

webteam

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என பூந்தமல்லியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். நேற்று காலை தருமபுரியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கிய அவர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களின் வழியாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்தார்.

பூந்தமல்லியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், ரமணா, அப்துல் ரஹீம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு அவர் பேசுகையில்... மின் கட்டணம், வீட்டு வரி உயர்வை வாக்களித்த மக்களுக்கு மு.க. ஸ்டாலின் பரிசாக கொடுத்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தை எப்படி நடைமுறை படுத்துவது, தடை செய்வது என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்கின்ற ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். ஆன்லைன் சூதாட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. அதில் சில பகுதிகள் திமுகவிற்கு கிடைக்கிறது. அதனால் தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கிறாராம்,

தமிழக முதல்வர் எதற்கெடுத்தாலும் குழு அமைப்பார் 14 மாத திமுக ஆட்சியில் 37 குழு அமைத்துள்ளார் அந்தக் குழுக்கள் எல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை, அதிமுகவை எவராலும் உடைக்க முடியாது. திமுக துணையோடு அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து பொருட்களை எல்லாம் சேதப்படுத்தினார்கள்.

அதிமுகவிற்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள் அதற்குண்டான பலனை அனுபவித்து விடுவார்கள் என பேசினார்.