தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டால், அவர்களை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்தி ஜூலை 10 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். மசோதா நிறைவேறுவதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எனவே உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. லோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியதை தொடர்ந்து இதனை 2018 ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டம் என கூறப்படும்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட லோக் ஆயுக்தா அமைப்பில் ஒரு தலைவர் மற்றும் 4 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
லோக் ஆயுக்தாவின் தலைவர் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய அல்லது ஓய்வுபெற்ற நீதிபதியாக இருப்பார், அல்லது 25 ஆண்டுகள் பொது நிர்வாகத்திலோ, நீதித்துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராகவோ இருப்பார்.
ஒரு உறுப்பினர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியாகவோ, நீதித்துறையில் 25 ஆண்டுகால அனுபவம் கொண்டவராகவோ இருப்பார்.
லோக் ஆயுக்தாவின் நான்கு உறுப்பினர்களில் 2 பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஒரு உறுப்பினர் - நீதித்துறையை சேராத உறுப்பினர்.
லோக்ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்வார்.
லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரைக்க தனியே குழு இருக்கும்.
பரிந்துரை குழுவின் தலைவராக முதலமைச்சரும், உறுப்பினராக பேரவைத்தலைவரும், எதிர்க்கட்சித்தலைவரும் இருப்பர்.
ஊழல் தடுப்புக்கொள்கையில் பொதுநிர்வாகத்தில், 25 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட நீதித்துறையை சாராத மேலும் ஒரு உறுப்பினர் இருப்பார்.
லோக் ஆயுக்தாவின் தலைவர் அல்லது உறுப்பினர் நாடாளுமன்றத்தின் ஒரு உறுப்பினராகவோ அல்லது மாநில அல்லது மத்திய அரசின் ஆட்சி பகுதி ஒன்றின் சட்டமன்ற உறுப்பினராகவோ இருப்பார்.
லோக் ஆயுக்தாவின் தலைவர் அல்லது உறுப்பினர்கள் குற்றம் எதற்காகவும் தண்டனை பெறாதவராகவும், பணியில் சேரும் தேதியன்று 45 வயதுக்கு மேற்பட்டவராகவோ இருப்பார்கள்.
பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்தா விசாரிக்கும்.
லோக் ஆயுக்தாவில் தவறாக புகார் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம்மும் ஒருவருடம் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.