மகளிர் உரிமைத் திட்டம்
மகளிர் உரிமைத் திட்டம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் திட்டம் : முன்கூட்டியே செலுத்தப்படும் ரூ.1000.. என்ன காரணம்?

Prakash J

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக 1 ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஒரு ரூபாய் அனுப்பியவுடன் விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மறுபுறம், ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இதுதொடர்பாக, மேல்முறையீடு செய்வதற்கான நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் இன்றுமுதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான குறுஞ்செய்திகளும் அதை உறுதி செய்து வருகின்றன. இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதிதானே தொடங்க இருக்கிறது. அதற்குள் ஏன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது என்ற கேள்வியும் எழுந்தது.

அந்த நாளில், அதாவது திட்டம் தொடங்கப்படவிருக்கும் நிலையில் அனைத்துப் பயனாளிகளுக்கும் ஒரேநேரத்தில் ரூ.1,000 செலுத்த முடியாது என்பதாலும், ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு பணத்தை வரவு வைப்பதால் ஏதாவது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும் என்பதாலுமே இன்றுமுதல் பயனாளிகளுக்கு பணம் செலுத்தும் பணம் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.