senthilbalaji
senthilbalaji pt desk
தமிழ்நாடு

உடல்நிலை சரியானதும் செந்தில் பாலாஜி சிறையா... மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வதென்ன..?

webteam

தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை, மோசடி பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. உடல்நிலை காரணமாக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில்,செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்துறை மற்றும மதுவிலக்குத் துறைகளை வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்து, அதுதொடர்பான பரிந்துரை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்தப் பரிந்துரையில் சரியான விவரம் இல்லை என்று கூறி ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்தார்.

மு.க.ஸ்டாலின்

இதையடுத்து, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர், உரிய விளக்கங்களுடன் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதத்தை அடுத்து, செந்தில்பாலாஜி வசம் இருந்த இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடுசெய்ய ஒப்புதல் அளித்த ஆளுநர், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அத்துடன், அவரிடம் இருந்த மின்துறையை, நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்குத் துறையை, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமியிடமும் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரிடம் இருந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து என்ன நடக்கும் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறிய கருத்துகளை பார்க்கலாம்...

செந்தில் பாலாஜி

இதற்கு முன்பாக இதேபோல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. 2015ல் ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, செந்தூர்பாண்டி என்ற அமைச்சருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் அவரை துறையில்லாத அமைச்சராக நீடிக்கச் செய்தார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இப்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், இதில் ஆளுநர் தன் இசைவை திரும்பப் பெறுவார். இதில், செந்தில் பாலாஜிக்கும் ஒரு நெருக்கடி இருக்கிறது.

இந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றத்தில் பிணை கிடைக்கும் ஆனால், அமலாக்கத்துறை, இவர் மிகுந்த செல்வாக்கு உடையவர். இப்போதும் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். இவரை வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்துவிடுவார். எனவே பிணை கொடுக்கக் கூடாது என்ற வாதங்களை முன்வைப்பார்கள். இதை தவிர்க்க செந்தில்பாலாஜி தானாக முன்வந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடலாம்.

எப்படி இருந்தாலும் பிணை கிடைக்காவிட்டால் அவர் சிறைக்குச் செல்ல வேண்டியதுதான் . அப்போது ஒரு அமைச்சர் சிறையில் இருக்கும்போது, அமைச்சருக்குரிய சலுகைகள், சம்பளம், வீடு இப்படி பொது மக்களின் வரிப்பணமும் இருக்கிறது. எனவே இது நல்ல ஏற்பாடு இல்லை என்பதுதான் எனது கருத்து " என்றார்.

செந்தில்பாலாஜி, ஆர்.என்.ரவி

இதுகுறித்து பத்திரிகையாளர் செல்வராஜ் கூறிய கருத்துகளை பார்க்கலாம்...

செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கான ஒரு முடிவை தமிழக அரசு ஏற்கெனவே எடுத்துவிட்டது. அதனால்தான் இவர் வகித்து வந்த பொறுப்புகள் இருவேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஆளுநர் ஏற்க மறுத்த பிறகுதான் திடீரென இந்த அரசாரணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆளுநரின் இந்த செயலை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்தும் வருகின்றனர் என்றார்.