தமிழ்நாடு

" 5 கி.மீ தூரம் நடந்தே செல்ல நாங்கள் என்ன கால்நடைகளா"- குமுறும் மலைவாழ் மக்கள்

kaleelrahman

அரசு அதிகாரிகளின் மெத்தனபோக்கால் மலைவாழ் மக்கள் தோளில் பால் கேன்களை சுமந்தபடி நடந்தே வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான கிராமங்களுக்கு சாலை வசதி என்பதே கிடையாது. அதிலும் கல்வராயன்மலை, தாலுகாவிற்கு உட்பட்ட தொரடிப்பட்டு ஊராட்சியை சேர்ந்த வண்டகபாடி கிராம சாலை சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக முற்றிலும் சேறும் சகதியுமாக மாறி விட்டது.


இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழலில் தாங்கள் வளர்க்கும் மாட்டிலிருந்து கறந்த பாலை, பால் சேகரிக்கும் நிலையத்தில் விற்பதற்காக காவடிபோல் தோளில் சுமந்தபடி ஐந்து கி.மீ. தூரம் தூக்கி செல்கின்றனர். இதேபோல ரேஷன் பொருட்களையும் மூட்டையாக கட்டி தலையில் சுமந்து செல்கின்றனர்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் சாலை வசதி அமைத்துத் தராமல் மெத்தன போக்கினை கடைபிடித்து வருகின்றனர் என்று இப்பகுதி மக்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர். அத்துடன் 5 கி.மீ தூரம் நடந்தே செல்ல நாங்கள் என்ன கால்நடைகளா என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.