தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், தவெக தலைவர் விஜய், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில், வேலுநாச்சியார் கதையை கூறி, கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார். திமுக, அதிமுக கட்சிகள் பாஜகவுக்கு அடிமையாக இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், தமிழ்நாட்டை மீட்டெடுப்போம் என உறுதியளித்தார்.
2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சாக ஈடுபட்டு வருகின்றன.
ஒருபக்கம் கட்சிக் கூட்டணி குறித்த அறிவிப்பு, மறுபக்கம் தேர்தல் அறிக்கைகள் சார்ந்த அறிவிப்பு என தமிழக அரசியல் களம் சூடிபிடித்திருக்கும் நிலையில், விஜய் தலைமையில் முதன்முறையாக தேர்தலை சந்திக்க காத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.
இந்தசூழலில் கரூர் துயரம் தவெகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், தவெக தலைவர் விஜயும் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக நேரடியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். அதனுடன் சேர்ந்து ஜனநாயகன் பட வெளியீட்டில் பிரச்னை, கரூர் துயரத்தில் சிபிஐ விசாரணை என தவெக பல சிக்கல்களை சந்தித்து வந்தாலும், தவெகவிற்கு நினைத்தது போலவே விசில் சின்னம் கிடைத்திருப்பது அவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்தசூழலில் தான் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விசில் சின்னத்தை அறிமுகப்படுத்திய தவெக தலைவர் விஜய், கூட்டணி குறித்த கட்சியின் நிலைப்பாட்டை வேலுநாச்சியார் சார்ந்த குட்டிக்கதை மூலம் வெளிப்படுத்தினார்.
தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், “திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் பாஜகவுக்கு அடிமையாக இருக்கும் இந்த சூழலில் தான், தமிழக மக்கள் நம்மை நம்புகிறார்கள். தவெக புதிய கட்சி அவர்களுடன் யாரும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என நம்மை சிலர், குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால், அது நமக்கு பழக்கமானது தான். அதேசமயத்தில், தமிழக மக்கள் நம்மை சரியாக மதிப்பிடுகிறார்கள். அதனால் தான், உச்சத்தில் வைத்திருக்கிறார்கள். யாரிடமும் அண்டிப்பிழைப்பதற்காகவோ, அடிமையாக இருப்பதற்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை. என் மண்ணுக்கும் மக்களுக்கும் பிரச்னை ஏற்படும்போது அதை தடுக்கவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்” என பேசினார்.
மேலும் கூட்டணி குறித்த நிலைப்பாடு குறித்து பேசிய விஜய், “ஒருமுறை சொந்த நாட்டிலேயே இருக்க முடியாத சூழல் வேலுநாச்சியாருக்கு வந்தது. அப்பொழுது நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவானார். பின்னர் சின்ன மருது, பெரிய மருது, சைய்யது கார்கி ஆகிய நட்பு சக்திகளுடன் பெரிய படையை திரட்டி ஆங்கிலேய படைகளுக்கு எதிராக போர் புரிந்து நாட்டை மீட்டார். நம்முடைய தவெக படையானது நட்பு சக்தி இருந்தாலும், இல்லையென்றாலும் தனியாகவும் நின்னு கெத்தா ஜெயிக்கிற அளவிற்கு மிகப்பெரிய படை.
நடக்கவிருப்பது வெறும் தேர்தல் அல்ல, இது ஜனநாயகப்போர். உங்களுக்கு என்னைப் பிடிக்கும் என்பது உண்மையானால், அதை தேர்தல் பணிகளில் காட்டுங்கள். நம்முடைய கொள்கைத் தலைவர்களுள் ஒருவரான வேலுநாச்சியார் நாட்டை மீட்டெடுத்ததைப்போல, நாமும் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்” என பேசினார். இதன்மூலம் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடவும் தவெக தயார் என்பதை வேலுநாச்சியார் கதையை சொல்லி தவெக தலைவர் விஜய் சூசகமாக தெரிவித்துள்ளார்.