Balasore Train Accident
Balasore Train Accident PTI
தமிழ்நாடு

Odisha Train Tragedy | தமிழகத்தைச் சேர்ந்த 127 பேரின் நிலை என்ன?

PT WEB

ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை ஓடிசாவில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 240-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில், இந்த ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளின் நிலை என்னவென்பது தெரியாமல் இருந்துவந்த நிலையில் தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 127 பேர் பயணித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 96 பேர் பாதுகாப்பாக உள்ளனர். அதேநேரம், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 31 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. பெங்களூர் - ஹவுரா ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பாதுகாப்பாக உள்ளனர். பெங்களூர் - ஹவுரா ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் நிலை குறித்து தகவல் தெரியவில்லை.

இந்நிலையில், ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லவும், அங்கு இருப்பவர்கள் சென்னை வரவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள், காலை 8.45க்கு புவனேஷ்வர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Balasore Train Accident

இதைத்தவிர்த்து சென்னையில் இருந்து உறவினர்கள் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு புவனேஷ்வர் வரை இயக்கப்படுகிறது.