அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீதான தமிழக அரசின் நிலைபாடு என்ன என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை ஆணைய அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது.
இதையடுத்து விசாரணை ஆணையத்தின் மீதான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்றும், முன்னாள் துணை வேந்தர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த நடவடிக்கைகளை தொடரப் போகிறீர்களா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மனுதாரர் தொடர் அச்சத்திலேயே இருக்க முடியுமா? இது ஊழலாக இருந்தால் விட மட்டோம் என்றும் நீதிபதி தெரிவித்தார். அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் கூறியதையடுத்து, விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.