தமிழ்நாடு

கூட்டணி கட்சிகளின் நிலை என்ன..?

Rasus

தமிழக முதலமைச்சர் பதவிக்கு பன்னீர்செல்வமும், சசிகலாவும் போட்டிபோடும் நிலையில், அதிமுக-வின் கூட்டணி கட்சிகள் யாருடன் கூட்டணி சேர்வார்கள் என்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிட்டது. மீதமுள்ள 7 இடங்களில் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. அக்கட்சி வேட்பாள்கள் கூட அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திலேயே களமிறக்கப்பட்டனர்.

மனித நேய ஜனநாயக கட்சி 2 இடங்களிலும், இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, கொங்குநாடு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிகள் படை, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலா 1 இடங்களிலும் போட்டியிட்டன. இவர்கள் அனைவரும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திலேயே களம் கண்டனர். இதில் முக்குலத்தார் புலிகள் படை நடிகர் கருணாஸ், கொங்குநாடு இளைஞர் பேரவை தனியரசு, மனித நேய ஜனநாயக கட்சியில் தமிமுன் அன்சாரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து நாளை நடைபெறும் மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகக் குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்ட முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவராக உள்ள கருணாஸ் யாருக்கு ஆதரவளிக்கிறார் என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை. அதேபோல், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு இரட்டை இலை சின்னத்திலேயே காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் இதுவரை யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.