தமிழ்நாடு

புயல் வலுவிழந்தாலும் தமிழகத்தில் தொடர் மழைக்கு காரணம் என்ன?

புயல் வலுவிழந்தாலும் தமிழகத்தில் தொடர் மழைக்கு காரணம் என்ன?

webteam

வங்கக்கடலில் உருவாகி இலங்கையில் கரையை கடந்த புரெவி புயல் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. புயலாக வந்தது ஏன் வலுவிழந்தது? வலுவிழந்தாலும் ஏன் தமிழகம் முழுவதும் மழை பெய்கிறது? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

ஒரு புயலை பொருத்தவரை கடலிலேயே நகர்ந்தால்தான் காற்றின் வேகம் அதிகரிக்கும். அப்போதுதான் புயல் என்பது தீவிர புயலாகவோ அதிதீவிர புயலாகவோ மாறும். ஆனால் புரெவி புயல் இலங்கைக்கும் தமிழகத்திற்கு இடையே உள்ள மன்னார்வளைகுடாவிற்கு அருகே மையம் கொண்டுள்ளது. அதை சுற்றிலும் நிலப்பகுதிகள் காணப்படுகிறது. அதன் காரணமாகவும் சற்று காற்று முறிவு ஏற்பட்டதன் காரணமாகவும் அந்த புயல் வலுவிழந்துள்ளது.

வலுவிழந்தாலும் தமிழகம் முழுவதும் மழை பெய்வதற்கு காரணம் என்னவென்றால், வடகிழக்கு திசையில் இருந்து காற்று நிலப்பகுதியை சுற்றி அதன்வழியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கி செல்கிறது. அவ்வாறாக ஈரப்பதத்தையும் மேகக்கூட்டங்களையும் அந்த காற்று கொண்டு வந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடைகிறது. அதனால்தான் தமிழகத்தில் மழை பெய்கிறது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அங்கேயே நீடிக்கும் பட்சத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.