தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அரசியல் கட்சி மாநாட்டை நடத்தினார். அப்போது மேடையில் பேசிய விஜய் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். விஜயின் பேச்சுக்கு திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஒருபுறம் இருக்க அதே மேடையில் பாஜகவை பற்றி அதிகம் பேசவில்லை என்ற விமர்சனம் விஜய் மீது வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பாஜக விஜயின் பின்புலத்தில் இருப்பதாகவும் பலர் விமசித்தனர்.
இந்த சூழலில் தான் அண்மையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தார் விஜய். இந்த சந்திப்பை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்தனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயை தாக்கி பேசியிருந்தார்.
இவற்றை எல்லாம் தாண்டி நிர்வாகிகளை சந்திப்பது, பொறுப்பு வழங்குவது என 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து தீவிர களப்பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். விஜய் வீட்டிலிருந்து கொண்டே அரசியல் செய்து வருகிறார் என அவர் மீது தொடர் விமர்சனங்கள் வலுத்தன.
இப்படியான சூழலில் தான், வரும், ஏப்ரல், மே மாதங்களில் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தரப்பில் இருந்து மத்திய அரசிடம் ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு கேட்டு விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பாதுகாப்புப் பிரிவினர் தமிழகத்துக்குள் விஜய் எங்கு சென்றாலும் அவருடன் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த ‘ஒய்’ (Y) பாதுகாப்பு அனைவருக்கும் வழங்கப்படுவது இல்லை. நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் போன்றவர்களுக்கு உளவுத் துறை அறிக்கையின் படி மத்திய அரசின் ‘ஒய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.