இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி, பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் மத்திய பாஜக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். நேற்றிரவு 11:30 மணியளவில் சென்னைக்கு தனி விமானம் மூலம் வந்தடைந்த அவரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜகவுக்கான மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, இன்று காலை 10 மணி முதல் மாலை நான்கு மணி வரையில், பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்வு குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாலையில் மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இல்லத்தில் அமித் ஷா அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.