கூமாபட்டி pt web
தமிழ்நாடு

"ஏங்க.. உங்கள நம்புனதுக்கு இப்படியாங்க?" - வீடியோ பார்த்து கூமாபட்டி சென்றவர்களுக்கு அதிர்ச்சி!

கூமாப்பட்டி | “வீடியோவில் பார்த்ததும் நேரில் பார்த்ததும் வேறங்க..” - நேரில் சென்றவர்களுக்கு அதிர்ச்சி!

Uvaram P

கூமாபட்டி என்ற கிராமத்தில் சுற்றுலா தலம் இருப்பதாக கூவி கூவி இன்ஸ்டாகிராம் ரீல்சில் அழைத்த இளைஞரை நம்பி, அங்கு சென்ற பலரும் ஏமாற்றத்தோடு திரும்பி வந்துள்ளனர். ஏங்க.. உங்கள நம்புனதுக்கு இப்படியாங்க? என்று கேட்கும் அளவிற்கும், உங்களுக்கு என்னா ரைட்ஸ் இருக்கு..

எங்கள இப்டி கூப்டு வந்து ஏமாத்துறதுக்கு என்று ஆயிரத்தில் ஒரு பாணியிலும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்தனைக்கும் காரணமான கூமாப்பட்டி இளைஞரே நம்மிடம் பேசி இருக்கிறார்.. கூமாப்பட்டி செல்லும் திட்டம் இருந்தால், இந்த வீடியோவை பார்த்துவிட்டு செல்லவும்..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியைச் சேர்ந்த தங்கபாண்டி என்ற பட்டதாரி இளைஞர், தண்ணீருக்குள் இருந்தவாறு வீடியோ போட்டே தனது கிராமத்தை பேமஸ் ஆக்கிவிட்டுள்ளார். ஏங்க.. எங்க ஊரு கூமாப்பட்டி தெரியுமா.. சொர்க்கமுங்க.. என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வீடியோ பதிவிட்டதில், ஒட்டுமொத்த சுற்றுலா பிரியர்களின் கவனமும் கூமாப்பட்டி பக்கம் திரும்பியுள்ளது.

தங்கபாண்டி வெளியிட்ட ரீல்ஸ்களில், தங்கள் பகுதி பசுமை செழிப்புடன் இருப்பதாகவும், பல்வேறு இடங்களில் குளிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், கோவிலாறு மற்றும் பிளவக்கல் பெரியாறு அணைக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப் படுவதாகவும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்த்து தங்கள் ஊருக்கு அனைவரும் வரவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது பேச்சை நம்பிய நெட்டிசன்கள், கடந்த இரண்டு நாட்களாக கூமாபட்டியை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், வெப்பத்தை தணிக்க இடம் தேடிக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலரும், ட்ரெண்டான வீடியோவால் கூமாபட்டிக்கு படையெடுக்க தொடங்கினர்.

அங்குதான் ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. . ஆம், கோடை காலம் முடிந்து மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பொழிவு இல்லாத காரணத்தால், தற்போது வரை அப்பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இல்லை. மேலும் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைக்கட்டுப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், தற்காலிகமாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அணைக்குள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக கட்டுப்பாட்டில் இருப்பதால், வனப் பகுதிக்குள் செல்வதற்கும் வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதை அறியாத பொதுமக்கள் வெப்பத்தை தணிக்க அணை பகுதிக்கு வந்துவிட்டு, உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று தெரிந்த பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இந்த நிலையில், ரீல்ஸ் மூலமாக ஊரை பிரபலமாக்கிவிட்ட தங்கபாண்டி நம்மிடம் பேசுகையில், தங்கள் பகுதியில் சுற்றுலா தலம் ஏற்படுத்தப்படும் பட்சத்தில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கும் எனவும், பிளவக்கல் அணையை மேம்படுத்த அரசு ஒதுக்கீடு செய்த நிதியை முறையாக செலவிட்டு தரம் உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், ரீல்ஸில் எந்த தொணியில் பேசினாரோ, அதே தொணியில் ஏங்க.. தமிழ்நாட்லயே எங்க ஊர் மாதிரி எங்கயுமே இல்லை என்று பேசி இருக்கிறார். இதனால் ரீல்ஸ் வீடியோவை நம்பி கூமாப்பட்டி சென்றவர்கள் ஏமாற்றத்தோடே திரும்பி செல்கின்றனர்.