சசிகலா விடுதலையாகும் நாள் குறித்த ஆர்.டி.ஐ. கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விடுதலை ஆவது குறித்து அவ்வப்பொழுது ஊகங்கள் எழுந்து வருகிறது
சில நாட்களுக்கு முன்பு சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்ற கேள்விக்கான பதிலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெற்றுள்ளார்.
அதன்படி 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி உத்தேசமாக விடுதலையாக வாய்ப்புள்ளதாகவும் சசிகலா செலுத்தவேண்டிய அபராதத் தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறைவாசம் நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ம் தேதி வரை அனுபவிக்க வேண்டும். அதன் பின்னர் விடுதலை செய்யப்படுவார் என கர்நாடக சிறைத் துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே சசிகலா சிறைக் கைதிகளுக்கான நன்னடத்தை மற்றும் விடுமுறை காலம் உள்ளிட்ட சலுகைகளை பெற்று முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனால் அவர் விரைவில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாகவும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சசிகலா சார்பில் சிறைத் துறைக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் தன்னைப் பற்றிய தகவல்களை மூன்றாவது நபருக்கு அளிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் மேலும் சில கேள்விகளுக்கு சிறைத்துறை பதிலளிக்க மறுத்திருந்த நிலையில், அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
கைதிகள் குறித்தான விடுமுறைகள் மற்றும் விடுதலையாகும் தேதி குறித்த தகவல்களை பெறுவது அடிப்படை உரிமைகள். எனவே, அது குறித்தான தகவல்களை தனக்கு அளிக்க வேண்டும் என நரசிம்மமூர்த்தி கோரியிருந்த நிலையில், சசிகலா சிறைவாசம் அனுபவித்த காலங்கள் மற்றும் பரோலில் விடுமுறைக்காக சென்ற நாட்கள் உள்ளிட்டவைகள் குறித்து நரசிம்ம மூர்த்திக்கு சிறை துறை சார்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தகவல் அடிப்படையில் சசிகலா போன்ற கைதிகளுக்கு விடுமுறை மற்றும் ரிமிஷன் போன்ற சலுகைகள் இல்லை என்பதாலும் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அன்றுதான் விடுதலையாக முடியும் என்றும் அதற்கு முன் கூட்டியே அவர் விடுதலை ஆகி வெளியே வருவார் என அவரது தரப்பில் கூறப்பட்டு வருவது முற்றிலும் தவறான தகவல் என்றும் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.