anwar raja aiadmk PT web
தமிழ்நாடு

ஆதங்கத்தில் 7 அதிமுக தலைகள்.. அடுத்த Choice ஆக விஜய்? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

ஆதங்கத்தில் 7 அதிமுக தலைகள்.. அதிமுகவினரின் Choice ஆக விஜய்? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

Uvaram P

அதிமுகவின் முக்கியப் புள்ளியாக இருந்த அன்வர் ராஜா, அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அன்வர் ராஜா, பல அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.. குறிப்பாக, தான் உட்பட யாருடைய கருத்தையும் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாக கூறியவர், பெயர் குறிப்பிடாமல் எழுவரை குறிப்பிட்டிருக்கிறார். அன்வர் ராஜாவின் விலகல் அதிமுக தலைகள் விலகல் படலத்தின் துவக்கப்புள்ளியா என்று விரிவாக பார்க்கலாம்.

அன்வர் ராஜா

எம்ஜிஆருக்கு ரசிகனாக துவங்கி அதிமுகவின் தென்மாவட்ட அரசியலில் கோலோச்சிய அன்வர் ராஜா, அதிமுகவின் நேரெதிரியான திமுகவில் இணைந்திருக்கிறார். இந்த முறை பாஜகவுடன் அமைந்த அதிமுக கூட்டணிக்குப் பிறகு, பல முக்கிய தலைகள் குமுரலை வெளிப்படுத்தி வரும் நிலையில், அன்வர் ராஜாவின் விலகல் அதிமுக வட்டாரத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அன்வர் ராஜா, தன் மனதின் ஆதங்கத்தை அதிமுக தலைமைக்கு தெரிவித்தும், ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தான் உட்பட யாருடைய கருத்தையும் கேட்பதில்லை.. ஏழு முன்னாள் அமைச்சர்கள் கருத்தை கேட்காமல் அவர் செயல்பட்டு வருகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

அன்வர் ராஜாவின் இந்த விலகல் குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி, அதிகமான அதிமுக தலைகள் அங்கிருந்து வெளியேறி வேறு இயக்கங்களுக்கு செல்ல இருக்கிறார்கள் என்பதைத்தான் அன்வர் ராஜாவின் விலகல் காட்டுகிறது..

எடப்பாடி மாற்றி மாற்றி பேசுவதே அன்வர் ராஜாவின் முடிவுக்கு காரணமாக இருக்கிறது. கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் வெளியேறத்தயாராக இருக்கிறார்கள்.. பல பேர் நிலையற்ற தன்மையில் இருக்கிறார்கள்.. தேர்தல் நெருக்கத்தில் அதிகமான அதிமுக தலைகள் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

anwar raja aiadmk

அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்திலும் சரி, கூட்டணி விஷயத்திலும் சரி.. ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட 7 முன்னாள் அமைச்சர்கள்தான் அன்வர் ராஜா குறிப்பிடும் நபர்கள் என்று அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தியை தொடர்புகொண்டு பேசினோம்.. அப்போது,

வேலுமணியும், தங்கமணியும் ஆட்சியில் இருந்தபோது, பாஜகவுடன் நெருங்கிய உறவில் இருந்தனர். அவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டுதான் எடப்பாடி நடந்துகொள்கிறார். அதிமுகவில் மற்ற யாருடைய பேச்சையும் கேட்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை.. அரசியலில் மிக மோசமான கட்டத்தில் அதிமுக இருக்கிறது என்று பகிர்ந்துகொண்டார்.

புகழேந்தி

அதோடு, அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா திமுகவில் இணைந்தது குறித்து கேட்கையில்,

திராவிட இயக்க பாரம்பரியத்தில் இருந்த அதிமுகவினர், இந்து முன்னணி மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பவில்லை.. ஆனால், இவர்கள் தடம்புரண்டு சொந்த நலனுக்காக ED-க்கு பயந்து இந்து முன்னணி பக்கம் போகிறார்கள் என்று இபிஎஸ்ஸின் முடிவை சாடினார்.

அதோடு, அதிமுகவில் இருந்து விலகும் தொண்டர்கள், திராவிட இயக்க வழியில் வந்த இயக்கத்தைத்தான் பார்ப்பார்கள்.. பாஜகவுக்கு எதிராக நிற்கும் இயக்கத்தின் பக்கம்தான் போவார்கள். அந்த வரிசையில் பாஜகவுக்கு எதிராக விஜய் வலிமையாக நின்றால், அவர் பக்கம் அதிமுகவினர் செல்வார்கள்.. பெரியார், அண்ணாவை பேசும் விஜய் பக்கமும், திராவிட பாரம்பரிய கட்சியான திமுக பக்கமும் போக வாய்ப்புள்ளது..” என்று விரிவாக பகிர்ந்துகொண்டார்.