வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5.30 மணியளவில் மரக்காணம் அருகே கரையை கடக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், சென்னைக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகனமழை எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் அளித்த தகவலின் படி, சென்னையில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 11செமீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 10.4 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
அதேநேரத்தில் கோவளம் பகுதியில் 60-70கிமீ வேகம் வரை காற்றுவீசிவருவதாகவும், பட்டினம்பாக்கத்திலும் அதீத காற்று வீசிவருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
பாண்டிச்சேரியை பொறுத்தவரையில் 9செமீ வரையிலான மழைப்பொழிவும், கடலூரில் 3 செமீ வரையிலான மழைப்பொழிவும் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கிய நிலையில், காற்றின் வேகம் புதுச்சேரியில் அதிகரித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
அதிகனமழை எச்சரிக்கையாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் முதலிய மாவட்டங்களுக்கு 10 மணிவரை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் மற்றும் கொந்தளிப்பு நாளை மாலை வரை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.