திமுக - காங்கிரஸ் web
தமிழ்நாடு

கள யதார்த்ததிற்கு மாறாக காங்கிரஸ்? கடும் கோபத்தில் திமுக! அரசியல் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, பாஜக கூட்டணிக்கு எதிராக போராடி வரும் நிலையில் கள யதார்த்திற்கு எதிராக செயல்படுகிறதா காங்கிரஸ் என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

PT WEB

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், விஜய் தலைமையிலான தவெக-வை கூட்டணிக்கான மற்றொரு வாய்ப்பாக வைத்திருப்பது போன்று பேசியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர். கூட்டணி குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுவெளியில் பேசக் கூடாது, அப்படி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சித் தலைமை தொடர்ச்சியாக சொல்லி வருகிறது. ஆனால், தொடர்ந்து பேசப்படுகிறது. பேசுவது வேறு யாரும் இல்லை.. தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான கிரிஷ் சோடங்கர் தான்.

முக ஸ்டாலின்

அப்படியென்றால், இது நிச்சயம் காங்கிரஸ் தேசிய தலைமை சொல்லித்தான் பேசப்படுகிறது என்றே கூறப்படுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது காங்கிரஸ். இந்த முறை 40 தொகுதிகள் ஒதுக்கீடு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை பிரதானமாக முன்வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மாநிலங்களவை உறுப்பினர் பதவியையையும் காங்கிரஸ் கேட்கிறது. இல்லையென்றால், தவெக-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகவே பரிசீலித்து வருகிறது.

ஆட்சியில் பங்கு இல்லை என்றும் கடந்தமுறையைப் போன்று 25 தொகுதிகளை மட்டுமே அளிக்கவும் திமுக முன்வந்துள்ளது. இதனால், கூட்டணிக்கான முரண்பாடு நீடித்துக்கொண்டே இருக்கிறது.

பின்னால் இருக்கும் அரசியல் பின்னணி..?

இந்த பிரச்னைகளுக்கு பின்னால் இருக்கும் அரசியல் பின்னணியையைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதையும், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் திமுக வழக்கமாக கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு-புதுச்சேரியையைச் சேர்ந்து 10 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கியது.

இது சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியாது என்கிறது திமுக. அதற்கான காரணத்தையும் அக்கட்சித் தலைமை கூறுகிறது. கடந்த முறை இருந்ததைவிட இந்த முறை கூடுதலாக தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இணைந்திருக்கின்றன. ஒரு தொகுதிகளை மட்டும் எதிர்பார்க்கும் 6 சிறிய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைகின்றன. அதனால், காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை அளிக்க முடியாது என்கிறது.

காங்கிரஸ், திமுக

அதுமட்டுமல்லாமல், 2024ம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸை புறந்தள்ளிவிட்டு 3வது கூட்டணியை அமைக்க வேண்டும் என தெலங்கானாவில் இருந்து சந்திரசேகரராவ், டெல்லியில் இருந்து அர்விந்த் கெஜ்ரிவால், மேற்குவங்கத்தில் இருந்து மம்தா பானர்ஜி, உத்தரபிரதேசத்தில் இருந்து அகிலேஷ் யாதவ் குரல் எழுப்பியபோது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்காக தீவிர முயற்சி எடுத்து சாத்தியமாக்கியது திமுக தான்.

அப்படிப்பட்ட நெருங்கிய நட்புகொண்ட திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் ஏன் திரும்பியது என்ற கேள்விகள் அதிகமாக முன்வைக்கப்படுகின்றன. இதுதொடர்பாக திமுகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

பாஜகவிற்கு எதிராக வலுவாக களமாடுவது யார்? திமுக அல்லது தவெக?

தேசிய அரசியலை விட மாநில அரசியல் தான் முக்கியம் என்று காங்கிரஸ் கருதுகிறதா.. பாஜகவை விமர்சனம் செய்யாத விஜயுடன் கோர்ப்பது காங்கிரஸுக்கு எந்த அளவிற்கு பலன் அளிக்கும் என்ற கேள்விகள் காங்கிரஸுக்கு முன் வைக்கப்படுகின்றன.

அதேவேளையில், ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதையும், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணை இருப்பதையும் கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக ராகுல்காந்தி குரல் எழுப்பியது, அப்பிரச்சனை நீள்வதற்கு காரணமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

ராகுல் காந்தி, ஜன நாயகன்

பாஜக அழுத்தம் கொடுக்கிறது என்று தற்போது தவெக நிர்வாகி அருண்ராஜ் பேசியிருக்கிறார். ஆனால், பாஜகவிற்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் விரிவாக பேசப்படவில்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழுக்கத்தை முன்வைக்கும் பாஜக, விஜயுடன் காங்கிரஸ் கைகோர்ப்பதை எப்படி பார்க்கும் என்பதையும் புறந்தள்ள முடியாது. இதுபோன்ற விவகாரங்களை எடுத்துச் சொல்லியும் காங்கிரஸின் பார்வை தவெக மீதே இருப்பதாக திமுக ஆதங்கம் தெரிவிக்கிறது. திமுக வலுவான கூட்டணியாக இருக்கிறது என்கிற பெயரை உடைக்கும் வேலையில் தான் காங்கிரஸ் ஈடுபடுவதாகவும் திமுக கடும் குற்றம்சாட்டுகிறது.