முதுமலை வனப்பகுதி
முதுமலை வனப்பகுதி pt web
தமிழ்நாடு

40 நாட்களில் 10 புலிகள் உயிரிழப்பு.. முதுமலை வனப்பகுதியில் நடப்பதென்ன?

PT WEB

நீலகிரி வனப்பகுதியில் புலிகள் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத்தில் புலிகளின் பாதுகாப்பு எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் அறிவது அவசியம். நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி உள்மண்டலம் மற்றும் வெளி மண்டலம் என இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 680 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாக இந்த வனப்பகுதி உள்ளது.

முதுமலை வனப்பகுதியில் சுமார் 150 புலிகள் உயிர் வாழ்வதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. முதுமலை புலிகள் காப்பக உள்மண்டலம் மற்றும் வெளி மண்டல வனப்பகுதிகளில் வாழும் புலிகளுக்கு பலத்த பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், முதுமலை வனப்பகுதியை விட்டு உதகை, கூடலூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் வாழும் புலிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கிறது. வனத்தை ஒட்டிய பகுதிகளுக்கு புலிகள் வரும்போது அதற்கான பாதுகாப்பு இல்லாததும் புலிகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

உதகை மற்றும் கூடலூர் வனப்பகுதிகளில் வாழும் புலிகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கால்நடைகளை வேட்டையாடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அவ்வாறு வனத்தை விட்டு வெளியேறும் புலிகளை வனத்துறையினர் முறையாக கண்காணித்து, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. சமீபத்தில் அவலாஞ்சி பகுதியில் புலியால் கொல்லப்பட்ட மாட்டின் உடலில் விஷத்தை தடவி அதனை உட்கொண்டு இரண்டு புலிகள் உயிரிழந்தன.

கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் புலி தாக்கி இதுவரை மாடுகள் உயிரிழந்திருக்கின்றன. ஆனால் வனத்துறை தரப்பில் இதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். வனத்தை ஒட்டியுள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் தங்கள் வாழ்வாதரம் பாதிப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடத்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே சுமூகமான உறவு இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் நாடக்கும் அத்துமீறல்கள் குறித்த தகவல்கள் வனத்துறைக்கு சரியாக கிடைப்பதில்லை என வனஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை வனத்துறையினர் உள்ளூர் மக்களோடு இணக்கமாக செயல்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் புலிகள் உயிரிழப்பை தடுக்க முடியும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.