தமிழ்நாடு

மனைவியை காப்பாற்ற தன்னுடைய உயிரை இழந்த கணவர் - நடந்தது என்ன?

மனைவியை காப்பாற்ற தன்னுடைய உயிரை இழந்த கணவர் - நடந்தது என்ன?

webteam

காளிகேசம் மலைப் பகுதியில் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சியாம் (28). இவர் டில்லியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனி ஊழியரான சுஷ்மா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், தீபாவளி விடுமுறையை ஒட்டி இருவரும் நாகர்கோவில் வந்த நிலையில், நேற்று கீரிப்பாறை அருகே மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாதலமான காளிகேசத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சுஷ்மாவை தண்ணீர் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த சியாம் அவரை காப்பாற்ற தண்ணீரில் குதித்துள்ளார்.

அப்போது தண்ணீரில் ஏற்பட்ட அலை காரணமாக சுஷ்மா கரை பகுதியில் ஒதுங்கியுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக சியாம் பாறை இடுக்கில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சுஷ்மா சத்தமிட்ட நிலையில், அப்பகுதியில் நின்றிருந்த உள்ளூர் வாசிகள், வனத் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சியாம் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.