கோவையில் கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது? குற்றவாளிகளின் பின்னணி என்ன? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்..
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 2ம் தேதி மாலை தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர் கோவை விமான நிலையம் அருகே உள்ள இடத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு கூட்டுபாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவியும் படுகாயமடைந்த அவரது நண்பரும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று இரவு குற்றவாளிகள் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது காவல்துறை..
பிடிபட்ட குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டபோது மூவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா என்கிற தவசி (20 வயது), சதீஷ் என்கிற கருப்பசாமி (30 வயது), கார்த்திக் என்கிற காளீஸ்வரன் (21 வயது) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் 3 பேர் மீதும் கொலை மற்றும் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது..
இதுகுறித்து கோவை காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் வசித்து வருபவர்கள் தான் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களாக காவல்துறையினரால் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் உடன்பிறந்த சகோதரர்கள் எனவும் மூன்றாமவர் அவர்களின் உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று சகோதரர்கள் இருவரும் தனது உறவினரையும் அழைத்துக்கொண்டு கினத்துக்கிடவு பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு மூவரும் சேர்ந்து சாவியோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு கோவை விமான நிலையம் அருகே உள்ள காலி இடத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது நண்பரும் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு அவர்களிடம் சென்றுள்ளனர். மாணவியும் அவரது நண்பரும் இவர்களைக் கண்டு அச்சமடைந்து காரில் ஏறித் தப்பிக்க முற்பட்டுள்ளனர். ஆனாலும் காரை வழிமறித்து தங்களிடமிருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களால் கார் கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் மாணவியின் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று கினத்துக்கடவு பகுதியில் பதுங்கியிருந்துள்ளனர்.
மயக்கம் தெளிந்த மாணவன் தன்னோடு மாணவி இல்லாததைக் கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல்கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு மாணவியை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையிலும் அவரின் நண்பரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. அதில் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் மூன்று முக்கிய சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூவரும் தான் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உறுதி செய்த காவல்துறையினர் அவர்களை தேடிவந்தனர்.. இந்த நிலையில் துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் குற்றவாளிகள் மூன்று பேரும் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கைது செய்யச் சென்றபோது அவர்கள் காவல்துறையினரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது 3வரையும் காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர்.
ஏற்கனவே மூவருக்கும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், மூவரும் 20, 21 மற்றும் 30 வயதுடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 2 நபர்களுக்கு 2 கால்களிலும் குண்டு பாய்ந்துள்ளதாகவும், ஒருவருக்கு மட்டும் ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், கூடிய விரைவில் கைது செய்யப்பட்டவர்கள்தான் குற்றவாளிகளா என்பதை உறுதி செய்ய மாணவியிடம் அடையாளம் காணும் சோதனை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.
இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்!” என பதிவிட்டுள்ளார்..